
இலவமரப் பூக்களென செம்பிழம்பாயிருக்கும் மண்ணின்
ஈரம் மணம் வீசிக்கொண்டிருக்கிற
நிலத்தின் ஆதிக்குடிகளாயிருந்தோம்
ஒப்பனையற்றதொரு முகத்தில் தொய்யில் எழுதி மலர்சூட்டி ஆராதித்த பொழுதொன்றில் மறைத்திருந்த ஆயுதங்கள் துளிர்விட்டன
பழுப்பு நிற சருகின் ஒலிக்குள் புதைந்திட்ட சிரிப்பலைகள்
பாண்டியாட்டத்திற்கு கட்டம் கட்டியாடியவர்களுக்கு புதிதாய் விரிந்தன அச்சத்தின் சாரம் ஆற்றுமணற்படுகைகள் சூறையாடிய
இரவின் காரிருள் பொழுதொன்றில் வல்லமை திரள் பறவைக்கூட்டம்
சிறகு விரித்து குனுகுக் குரலெழுப்பி தாவிப்பறந்தது
நாளங்கள் புடைக்கும்படி பதற்றத்தோடான தெறிப்பொன்றில்
துப்பாக்கி ரவைகளின் குறி பார்த்தல்
வாய்க்கரிசி போடுவதாய் பூமியின்
ஆதாரசுருதி அறுத்து தின்னப்பட
மண்ணுமில்லை
நீருமில்லை
மலையும் காடுமில்லை
துருத்திக்கிடக்கிற விதைதெறிக்க காத்திருக்கும் ஆயுதங்களின்
கூர்மையுள் குருதித்திவளை குபுகுபுவென பொங்க
சாதிக்கு நேராய் தோட்டாக்கள் திணித்த துப்பாக்கி
அணுவின் பெயரால் கட்டி உருவாக்குகிற நமக்குநாமே பலி
நதியும் உடைமையென்ற அபகரிப்பு
எல்லைகள் பிளந்திருக்க
நீதியும் நியாயமும் காட்டுப்பூனையாய் வேட்டைக்கு தயாராக
உதிர வாதைகளின் சங்கமத்தில்
வெடிக்கக் காத்திருக்கும் உயிர்களின் ஓர்மை உரு
நீ நான் களைந்து வீதிகளில் கூட
நகரங்களில் கிராமங்களில்
தெபாகா வீதிகளில் இராட்சத மரங்கள் கிளைக்கின்றன