எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்

கலாப்ரியா
“காலத்தை சொற்களால் கடப்பவளின்
வார்த்தைகளுக்குள் உருண்டோடும்
பனிக்குடத்தின் வாசனை..”
இது ச.விசயலட்சுமியின் கவிதை வரிகளில் ஒன்று.காலம் என்றொரு கருது கோள் குறித்து எனக்கு எப்பொழுதுமே சந்தேகம் உண்டு. இந்த வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது காலத்தை சொற்களால் கடந்து விடமுடியும் என்ற ஒரு அர்த்தம் தொனிக்கிறது. ஆனால் முழுக் கவிதையையும் ஒன்றிணைத்துப் பார்த்தால் வேறு ஒரு பரிமாணம் தட்டுப் படும்.
வரலாற்று வேர்களை சுமந்த பேரிளம்பெண்
பாறை இடுக்குகளின்
பச்சைகளை மிதித்தபடி
இருள் சூழ்ந்திடும் அச்சம் விரட்ட
சணர்களின் வாழ்விடம்
குறிக்கும் சுட்டியில்
நிலைத்த கண்கள்
விடைபெற்ற தருணத்தில்
ஆங்கோர் கற்பாவை
கொஞ்சியழைத்தது
அருகில் சென்றேன்
தலை வருடியது
சிலநூற்றாண்டுகளின்
வரலாற்று வேர்களை
சுமந்த பேரிளம்பெண்
அவளின் அடி வயிற்று நெளிவுகள்
பல்லாயிரம் கதைகளைப் பரப்பும்…
என்று நீளும் இக்கவிதை முழுமையடையும் போது ‘காலம்’ நின்று விட்டதை உணர முடிகிறது. இந்த நல்ல கவிதையில்  ’ஆங்கோர் கற்பாவை
கொஞ்சியழைத்தது
அருகில் சென்றேன்
தலை வருடியது…..’
 போன்ற இருபதாம் நூற்றாண்டின் வாசகங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.. தமிழ்க்கவிதை இதைக்கடந்து வந்து அரை நூற்றாண்டுகள் ஆகின்றன. இதை நான் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு. ச.விசயலட்சுமி யின் இத்தொகுப்பு பூராவிலும் மிகப் புதிய சொற்களும், சொற்சேர்க்கைகளும் ’பாறை இடுக்குகளின் பச்சைகள்’ போல அழகாக விரவிக் கிடக்கின்றன.” நீர்மையின் பேருடல்”, ’உடலின் புதிர் ரேகைகள்’ ’உணர்வுத்தாழி’ என்பவை அவற்றில் சில..
     ச.விசயலட்சுமி யின் தனித்துவமான ஒரு மொழி இத்தொகுப்பை அவரது முதல்த் தொகுப்பான’பெருவெளிப்பெண்’ணிலிருந்து பெரிதும் வேறு படுத்திக் காட்டுகிறது.முதல்த் தொகுப்பின் முன்னுரையில் தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.
‘அம்மா என்றதும்
 சுரப்பதில்லை
 இதயத்தில்  எவ்வித நீரூற்றும்-
என்ற வரி தட்டையாய், கவிதைக்கான நுணுக்கமற்று……இருப்பதாகவும் எனினும் அது சொல்ல வரும் செய்தியால் கவிதை வீர்யம் பெற்று விடுவதாகவும் ஒரு கவிதையைக் குறிப்பிட்டிருக்கிறார். சொல்லப்பட வேண்டிய அவதானிப்புத்தான் இது. ஆனால் இந்தக் குறைகளை ச.விசயலட்சுமி இத்தொகுப்பில் வெகுவாகக் களைந்திருப்பது அவரது கவிதை குறித்த முனைப்பையும் முன்நகர்வையும் நன்கு உணர்த்துகிறது.
அபத்தமெனும் துன்பியல் நாடகம்
 
முன்னெப்போதும்
ஒத்திகை பார்த்திராத
அபத்த நாடகமொன்றின்
கதாபாத்திரங்களைத் தேர்கிறாள்
அதற்கு முன்னும் பின்னும்
நடித்துப் பழகியிராதவர்களின் கைகளில்
சன்மானமாய்
சில மூன்று பக்க நாணயங்களை
பரிசளிக்கிறாள்..
வலிகளை மட்டுமே
பேச வேண்டுமெனவும்
விருப்பங்களை நிராகரித்தும்
விரிகின்றன நிர்ப்பந்தங்கள்.
எல்லாவற்றையும் மீறி
அன்பால் மட்டுமே
வாழ்வு சாத்தியப்பட்டிருப்பதாக
நம்பச் சொல்கிறாள்
கதாபாத்திரங்கள் நம்பி
நாடகம் நிகழ
அரங்கெங்கும் எதிரொலிக்கிறது
அன்பின் வலி.
இது ஒரு முழுமையான கவிதை. (தலைப்பு சற்றே கவனிக்கப்பட வேண்டும். மூன்று பக்க நாணயம் என்றெல்லாம் அபத்தத்திற்கு அழகு சேர்க்க முனைய வேண்டாம். அதற்கு வேறொன்றை யோசித்திருக்கலாம்.இப்படி சில நுணுக்கங்களை என் தோழிக்கு நான் சொல்லுவதால், அவர் அதைரியப்பட மாட்டார் என்றே நம்புகிறேன்)
’பெருவெளிப்பெண்’ தொகுப்பில் சில கவிதைகள், நீளமான கவிதையைச் சற்று சுருக்கினால் நல்லது என்ற முனைப்பில் வலிந்து செயல்பட்டு  ஒரு வித ஒருங்கமைவு இல்லாதது போல் தோன்றுகிறது. இதில் அப்படி எந்தக் கவிதையும் இல்லை.
’ஆந்தை உறையும் வீடு’ என்றொரு கவிதை.- தான் பட்ட பிரத்யேகமான துயரொன்றைக் கூறுவது போல் அமைந்திருக்கிறது. பிரத்யேகத்தைத்தாண்டி, பெண் மனதையும் பெண்ணின் சங்கடங்களையும் கூறும் ஒரு பொதுவான தளத்தில் இயங்குவதையும் காண முடிகிறது. இந்தக்கவிதையில் வருகிற அவள்- இவளாகவே இருந்தாலும்(?) இவளாகத் தோன்றாதபடி கவிதை சிறப்பாக வந்திருக்கிறது. இதுதான் முக்கியம். நாம் நம் வலிகளிலிருந்து, பிறர் வலி உணரும் மனிதர்களாக மாற வேண்டும். அப்போதுதான் கவிதை காலம் கடந்து நிற்கும்.
’கடல் கொண்டவள்’ என்கிற கவிதையின் முற்றான பெண் மொழி வசீகரம் மிக்கது. ஆண்மையின் நம்பிக்கையின்மை, கையாலாகாத்தனம், ‘திமிர்’ என்கிற ஆணாதிக்கச் சொல்லால் கட்டிப் போடப் பார்க்கிறது பெண்ணை.(கவனிக்க:பெண்மையை அல்ல) ஆனால் பெண், பெருங்கடலாகி ஜீவராசிகள் அனைத்தையும் நீந்த விட்டுக் களிக்கிறாள்.
“துவக்கத்தில்
கடல்க் கன்னியாயிருந்த நான்
இப்பொழுது பெருங்கடலாகியிருந்தேன்.
நீர்மையின் பேருடலில் இன்னும்
ஏராளமாய் ஜீவராசிகள் நீந்திச் செல்கின்றன”- என்று முடியும் வரிகளைக் கொண்ட இது இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. இதன் தலைப்பை ‘உடல் கொண்டவள்’ என்று கூட வைத்திருக்கலாம். எல்லாக்ககவிதைகளைப் போலவே இதிலும் ஒரு அருமையான லிரிஸிசம் இருக்கிறது. இந்த’பாத்தன்மையை’ ச.விசயலட்சுமி சற்றே கவனமுடன் வளர்த்தெடுக்க வேண்டும். “தோற்றப் பிழை’ என்ற கவிதையையும் இந்தத் தரத்தில் பார்க்கமுடியும்.
இன்னொரு முறை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும்- என்றொரு கவிதை.ஏதோ ஒரு கவிதை வாசிப்பு அரங்கிலிருந்து கொண்டு உடல் நலக் குறைவான குழந்தையை நினைத்தபடி மேடையின் அழைப்புக்காக தவிப்புடன் காத்திருப்பதாக ஒரு கவிதை. இதைச் சற்றே சுருக்கமான மொழியில், காலக்கொடைஞர் தலைமையின் சிம்மாசனம், இதையெல்லாம் தவிர்த்து நேரடியாகச் சொல்லியிருந்தால் ரொம்ப அருமையாய் இருந்திருக்கும்.
     பல கவிதைகளில் வார்த்தைகள், தன் போக்கில் கருக்கொள்ளும் இயல்பான நிகழ்வை நன்கு உண்ர முடிகிறது. அவை வெறும், புதிய பெயர்ச்சொல்லாகவோ , சொற்சேர்க்கைகளாகவோ நின்று விடாமல் கவிதையைச் சுகமாக நகர்த்திச் செல்லுகின்றன.’செவ்வக வனத்தின் காற்று’, ’பின்பொரு நாள்’ ஆகியவை இதற்கான உதாரணம். நேர்மாறாக வெறும் வார்த்தை வசீகரம் கவிதையாகாமல்  நிற்பதும்  நிகழ்கிறது. உதாரணம் “ அட்சய பாத்திரம்”.மௌனித்தல், பயணித்தல் போன்ற சீக்கிரமே  வழக்கொழியப் போகிற சொற்களையும் அவர் தவிர்க்கப் பழக வேண்டும். அவற்றிற்கும் நாற்பது வயதாகப் போகிறது.
     ”சந்தோஷமானவைகளையும் கொண்டாட்டங்களையும் பகிர்ந்து கொள்ள எழுதுவது உற்சாகமளிப்பதாக”ச.விசயலட்சுமி குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு விரிவான அனுபவங்கள் இருக்கின்றன. பல களப்பணிகளையும், பல உண்மையான மனிதர்களையும் சந்தித்தவர், சந்திப்பவர். தோழமை நிறைந்தது அவரது உலகம். இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் பல கிணற்றுத் தவளைகள் மத்தியில், மேல்த்தட்டுக் கவிஞர்களின் ஆரவாரங்களுக்கிடையே தன் விசாலமான அனுபவங்களுடனும் புரிதல்களுடனும் அவர், தன் “ஆயுளின் நெடுமையெங்கும்” இன்னும் சிறப்பான பல கவிதை உரைநடைத் தொகுப்புகளைத் தருவார் என்று மகிழ்ச்சியுடன் நம்ப வைக்கிறது இத்தொகுப்பு.. வாழ்த்துக்கள், ச.விசயலட்சுமி.
அன்புடன்
கலாப்ரியா

 

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை, கவிதைகள், மதிப்புரைகள் and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s