பெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பில் சமுதாயச் சிந்தனைகள்

முனைவர் கோ.குணசேகர்
தமிழ்த்துறைத் தலைவர்
ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வில்லியனூர்,
புதுச்சேரி – 605 110.
ச. விசயலட்சுமியின்
பெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பில் சமுதாயச் சிந்தனைகள்
புதுக்கவிதை தமிழக இலக்கியக் களத்தில் கால்கொண்டபோது எண்ணற்ற விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் கல்விகற்றோர்களால் வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பு புதுக்கவிதைத்துறை பல்நோக்கில் வளர்ந்தது. வட்டார நோக்கிலும், புதிய புதிய உத்திமுறைகளைக் கொண்டும் இன்றைக்கும் குறிப்பிடத்தக்கதொரு வளர்ச்சி நிலையை எட்டியிருக்கின்றது. புதுக்கவிதைத் துறையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கவிஞர்களும் மிகச் சிறந்த கவிதைத் தொகுப்புகளைப் படைத்திருக்கிறார்கள். அவை பெண்களின் உணர்வுகளையும், அவர்களின் இருப்பினையும் தெளிவாக்குகின்றன. அவ்வகையில் ச.விசயலட்சுமி படைத்திருக்கும் பெருவெளிப்பெண் என்னும் கவிதைத் தொகுப்பு, பெண்களுக்குச் சமுதாயத்தில் நிகழும் அவலங்களையும், அவர்கள் உரிமை பெறவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது.
பெண்களை ஒதுக்கி வைத்தல் :
பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் தனித்து இருக்க வேண்டும், அவர்கள் பொருள்களைத் தொட்டால் தீட்டு, எதனையும் தொடங்கக்கூடாது, ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டும் என எண்ணற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பெண்கள் வயிற்று வலியில் துடிக்கும்போது அவர்களை யாரும் கண்டுகொள்ளாத நிலையும் ஆதரவாகப் பார்க்கக்கூட மனிதர்கள் அற்ற நிலையும் நிலவுகிறது.
உடல் சோர்வு
உணர்வை அழுத்த
மனசு சுத்தமாயிருந்தால்
நாளுங் கிழமையுமாய்
உட்காருவியா இப்படி
மூலையில் முடங்கு
தீவிரமானது தீண்டாமை
வயிற்றில் முற்றிய வலி
வயிற்றுக்குத் தேவையில்லை மருத்துவம்
ஆதரவாய் ஒரு பார்வை இல்லை
தோரணமும் அபிஷேகமும்
அறுசுவை உண்டியோடு தீபாராதனை
எரிகிறது மனமும் (ப.23)
மாதவிலக்காவது இயல்பான நிகழ்வு எனினும், மாத விடாய் வருகின்றன நாள் விழா நாளாகவும் வழிபாட்டிற்கு உரிய நாளாகவும் அமைந்துவிட்டால் வலித் துன்பத்தோடு அவர்கள் அனுபவிக்கின்ற மனத் துன்பங்களும் ஏராளம் என்பதே கவிதையின் பொருளாகிறது. பெண்கள் உணர்வுள்ள பொருளாக, அவளுக்கும் மனசு உண்டு என மதிக்க வேண்டும் என்னும் குரல் சமூகத்தை நோக்கியதாக ஓங்கி ஒலிக்கிறது.
பெண்களின் நிலை :
பெண்கள் காலந்தோறும் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். போகப் பொருளாகப் பார்க்கப்பட்டிருக்கிறார்களே தவிர, மனுசி என்னும் சிந்தனை கொண்டு பார்க்கப்படவில்லை. உலகில் வாழ்வதற்கு மக்கள் இனத்தைப் படைத்துக் கொடுப்பது பெண். ஆனால் அவள் சமுதாயத்தால் அனுபவிக்கும் இன்னல்கள் ஏராளம் என்பதைக் கவிதையில் பதிவு செய்கிறார், ஆசிரியர்.
உயிர்ப்புகளின் கருவு+லமாய்
மரபணுக்களின் கிடங்காய்
அகிலத்தின் இரகசியமாய்
கருக்களைச் சுமந்து
உயிரொலி மீட்டி
உயிர்ப் பெருக்கமும்
உலகின் இயக்கமுமாய்
யாம்
சுற்றிப் புகையும்
புரியாத பலப்பல தத்துவங்கள்
தொடரும் வன்முறைகள்
ஈட்டிகளாகவும் ஆயுதங்களாகவும்
எம்மீது தொடுக்கப்படும் வன்முறைகளைப்
புனிதப் போர்களெனச் சாற்றிக் கொள்ளலாம். (பக்.24-25)
உலக சமுதாயத்தைப் பொறுத்தவரை பெண் என்பவள் உயிர்களை உற்பத்தி செய்து கொடுக்கும் இயந்திரமாகவே இருக்கிறாள். அவ்வாறுதான் சமூகத்தால் நினைக்கப்படுகிறாள். பெண் என்பவள் ரகசியப் பொருள் என்றும் அவளின் கடமை உயிரைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே என்றும் மரபு ரீதியான சிந்தனை மக்களின் மனத்தில் ஊறியிருக்கிறது. கருவைச் சுமக்கும் போது அவள் படும் துன்பங்கள் ஏராளம். ஆனால் கல்விகற்று அறிவில் சிறந்த புதுமைப் பெண்ணால் இத்தனை தடைகளையும் மீறி சுயத் தன்மையுடன் கற்க இயலும் என்னும் சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
முற்போக்குச் சிந்தனை :
பெண்கள் பலவீனமானவர்கள் என்னும் கருத்து ஆண் வர்க்கத்தால் புனையப்பட்டது. இயற்கையில் பெண் என்பவள் போராடும் குணம் மிக்கவள். பொறுமைமிக்கவள் காலத்தின் போக்கில் அவள் சில வேளைகளில் ஏமாற்றுக் காரர்களால் கயவஞ்சகர்களால் ஏமாற்றப்படுகிறாள். பழிச்சொல்லை ஏற்கிறாள். இவள் குணம் கெட்டவள் என்னும் நடத்தை கெட்டவள் என்றும் முத்திரை குத்தப்படுகிறாள். இத்தகைய நிலைக்கு அடிமைப்பட்டுப் போராடும் குணம் இல்லாத பெண்கள் வீழ்ந்து போகிறார்கள். ஆனால் போராடும் குணம் கொண்ட பெண்கள் எந்த நிலையில் இருந்தும் போராடி மீண்டும் வரும் தன்மையாளர்கள் என்பதைக் கவிஞர் விசயலட்சுமி தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
பெறாமலிருந்தேன்
பெற்றிழந்தேன்
ஒன்றைப் பெற்றேன்
பட்டப் பெயர்பல திசைப் பாய்ச்சலாய்
பட்டப் பெயருக்குப் பயந்து
வரையறையின்றி அளித்தேன்
மகளும் தாயும் ஒரே நேரத்தில்
வயசாகியும் முந்தி சுருக்கல
வசைப் பேச்சு வசீகரிப்பில்
கூத்துப்பார்க்கும் கூட்டம் என்னைச் சுற்றி……
போதும் நிறுத்து என
ஆயுதங்களின்
முற்றுகை தொடர
எல்லாவற்றிற்கும் நானே காரணம் என்ற
இரைச்சலுக்கு மத்தியில்
குத்தகைக்குவிட்ட யோனி மீட்டு
மீண்டும் உயிர்த்தெழுவேன் (ப.27)
பெண்ணின் உயிர்தெழும் ஆழமான நம்பிக்கையை இக்கவிதை விதைக்கிறது. பெண் என்பவள் வீழ்ந்துவிடுபவள் அல்ல. தக்க சமயத்தில் தடைகள் அனைத்தையும் வென்று வெற்றி பெறும் இயல்பினாள் என்னும் செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் அவலமான சூழ்நிலைக்கு உள்ளாகி எழ முடியாமல் சிக்கல்களில் விழுந்து அழிந்துபோன பெண்ணைப் பற்றியதாக அமையாமல் விசயலட்சுமியின் குரல், தவறான பாதைக்குச் சென்றிருந்தாலும் உட்பட்டிருந்தாலும் அதனைக் கடந்து மீண்டும் தன்னிலை அடைந்து சாதனை படைக்கும் வல்லமை உடையவள் என்பதையே கவிதைமுன்னிறுத்துகிறது.
அடக்குமுறை :
குடும்பம் என்னும் அமைப்பே நல்விளைவுகள் பலவற்றின் நடப்புக்குக் காரணமாகின்றது. குடும்பத்தில் பெண் என்பவள் மதிக்கப்பட வேண்டும். அவளுக்கான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்னும் சிந்தனைகள் ஆசிரியரின் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுகின்றன. குடும்பத்தில் கல்வி அறிவற்ற சூழலில் கிராமத்துப் பெண் எதிர்கொள்ளக்கூடிய அடக்குமுறைகள் பல.
கருக்கலிலே களையெடுக்கப்போன
என் ஆத்தா
பொழுது சாய வீடுவரும்….
அப்பன் மீசை பார்த்து என்
அடிவயிறு கலங்கும்
அதுகை அருவாமாதி;ரி…
கூயிப் பணங்கேட்டு
ஆத்தாவ இழுத்தடிக்கும்
உடம்பு முச்சூட வீக்கம் கொப்பளிக்கும்…..(பக்.28-29)
இக்கவிதை பெண்ணுக்கு நடக்கும் அடக்கு முறையினை வன்முறையினை எடுத்துக் காட்டுகிறது. பெண் என்பவள் ஆணுக்கு அடக்குமுறைப் பொருள். அவன் கொடுமைப்படுத்தி இன்பம் காண்பதற்கான சாதனம் என்றவாறாக அமையும் கவிதையின் போக்கு அடிமைப்பட்டு வெளியேற முடியாத எண்ணற்ற பெண்களின் குரலாக ஒலிக்கிறது.
சமுதாயத்திற்கான செய்தி
பெண், இலக்கியத்தில் வருணிக்கப்படுகிறாள். படைப்பிலக்கியங்களில் அழகுப் பெட்டகமாய் விவரிக்கப்படுகிறாள். மொத்தத்தில் அவள் அலங்காரப் பொருளாகவும் அன்ன நடை உடையவளாகவும் கிளிப்பேச்சு உடையவளாகவும் கூறப்படுகிறாளே தவிர அவளுடைய ஆசை என்ன? விருப்பம் என்ன? சமூகத்தில் அவளுக்கான இடம் என்ன என்பவை எல்லாம் யாராலும் சிந்திக்கப்படுவதற்கு உரியதாக இல்லை. பெண்தானே என்னும் ஏளனப் போக்கே நிலவுகிறது. இந்நிலையில் புதுமைப் பெண்ணின் குரலாகக் கவிதை ஒன்றைக் கவிஞர் விசயலட்சுமி அமைந்திருக்கின்றார். பெண்கள் போகப் பொருளாக நினைக்கப்பட்டு அவர்களைக் கண்களால் காண்பவர்கள் அவர்களுக்கும் உணர்வு, உயிர், துடிப்பு அத்தனையும் உண்டு என்பதை உணர வேண்டும் என்னும் சிந்தனையினைக் கவிஞர் வலியுறுத்துகிறார்.
குனிந்ததலை
கிளிப்பேச்சு
அன்னநடை
அலங்காரப்பொருட்கள்
என
அடுக்கியது போதும்
என் முகவரி தேடினால்
நான் துறந்தவற்றைத்
தொடுப்பதேன்!
உடல்மேயும் விழிகளே
எம் உயிர்த்துடிப்பைச்
சுவாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் (ப.33).
இவ்வாறான கவிதைகள் விசயலட்சுமியின் குரல் பெண்களுக்கான உரிமைகளை மீட்டுக்கொடுப்பதாகவும், சமூகத்தில் அவர்களின் இருப்பை அர்த்தப்படுத்துவதாகவும் அமைகிறது. பெண்கள் மதிக்கப்படவேண்டும். அவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்னும் சிந்தனை கவிதைகளில் தெளிவுபடுத்தப்படுகிறது.
எ பெண்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும். அவர்களின் உடல் கூறையும் நிகழ்வுகளையும் காரணம் காட்டி ஒதுக்கி வைக்கக்கூடாது என்னும் சிந்தனை வெளிக்காட்டப்படுகிறது.
எ பெண்கள் மீதான அடக்கு முறையும் தவறான பார்வையும் நீங்க வேண்டும் என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது.
எ எத்தகைய சோதனைகளையும் வென்று வாகைசூடும் தன்மையில் பெண் என்னும் சிந்தனை முன்வைக்கப்படுகிறது.
ச. விசயலட்சுமி – பெருவெளிப்பெண்
சென்னை :
மித்ர ஆர்ட்ஸ் ரூ கிரியேஷன்ஸ்
முதல் பதிப்பு : டிசம்பர், 2007.

 

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், மதிப்புரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to பெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பில் சமுதாயச் சிந்தனைகள்

  1. பாலராஜன்கீதா சொல்கிறார்:

    தயவுசெய்து இந்த இடுகையில் (தமிழ்) எழுத்துருவைச் சரிபார்க்கவும். வாசிக்கவே இயலவில்லை. 😦
    இயன்றால் சரியான எழுத்துருவில் மீள்பதிவு செய்தால் வாசித்து மகிழ்வோம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s