மௌனத்தவமிருக்கும் உயிர்முடிச்சு………..

ச.விசயலட்சுமி
 
பெருங்கலவரங்களற்ற சிறுவயதில் மனதிற்கு மரங்கள் தோழிகளாகவும் மலர்கள் ஒட்டுமொத்த சந்தோஷத்தின் குவியலாக இருப்பதாகவும் உணர்கிறேன்.காகங்களோடும் ,குருவிகளோடும்  தம்பி தங்கைகளுக்கு சோறூட்டிய நாட்களுக்கும் பின்னாட்களில் மகள்களுக்கு சோறூட்டிய காலத்திற்குமான வித்தியாசம் அதிகம்.என் சிறுவயதில் வீட்டின் அருகிலிருக்கும் மொட்டை மாடியிலிருந்து சென்டிரல் இரயில் நிலையத்தையும் அதனை ஒட்டிய ரிப்பன் கட்டிடத்தையும் பார்க்கச் செல்வேன். அப்பொழுதெல்லாம் மரங்கள் மறைத்துக் கொள்கிறதே என ஆதங்கப்பட்டிருக்கிறேன்.இரண்டு கட்டிடங்களிலும் இருக்கும் மணிக்கூண்டுகளைப் பார்த்து அவ்வப்போது நேரத்தை சொல்லிக் கொள்வது விளையாட்டான பொழுதுபோக்கு.இன்று கட்டிடங்கள் மறைத்துக் கொண்டிருக்க  எம்பி எம்பி நேரம் பார்த்த நாட்கள் பழங்கதையாய்ப் போனதன் வருத்தம் மட்டுமே எஞ்சியிருக்கின்றது.
மதராசப்பட்டினம் படத்தில்  சென்னை நகரத்தைப் பார்க்கும் சமயங்களிலும் பழைய படங்களில் சென்னையைக் காட்சிப்படுத்தியிருப்பதிலும் மரங்கள் நிறைந்த நகர்மயமாகாத சென்னை ஈர்க்கும்.
குழைந்தைப் பருவ காலங்களில் பாட்டியோடும் பெரியப்பாவோடும் நேப்பியர் பார்க் என அழைக்கப்படும் இன்றைய மேதினப் பூங்காவிற்கு செல்வது வழக்கம். பவழ மல்லியும் பூக்கள் பூத்திருக்கும் கலியாண முருங்கை மரமும் என்னைக் கவரும் பவழ மல்லியை சேகரித்து மடியில் கட்டிக்கொண்டு வீடு வருவேன்.
எனது பதின்ம வயதுகளில் நான் வாழ்ந்த சென்னைப் புறநகர்ப் பகுதி மரங்கள் அடர்ந்தது.புளிய மர நிழல் போர்த்திய சாலைகளில்  மாலை இளம் வெயிலில் நடப்பதும், மழை காலங்களில் ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்காக ஓடி ஒதுங்குவதும் இடிக்கு பயந்து காதை இறுக மூடிக்கொள்வதும் லேசாக காதை விரல் நுனியில் வைத்து சுழற்றினால் ஏற்படும் ரீங்காரத்தில் மூழ்கித்தெளிவதுமான நாட்கள் இன்று கிடைக்காதவை.புளிய மரம் ஏறுவதும் புளிய இலைகளை வைத்து  சுடுகஞ்சிக்கு துவையல் அரைத்து உண்பதும், காய்க்கும் சமயங்களில் பிஞ்சுக்காய்களை வைத்து துவையல் செய்வது.மேலும் செங்காய்களாகத் தேடி எடுத்து பாடப் பைக்குள் மறைத்து வைத்து அம்மாவுக்கு தெரியாமல் சாப்பிடுவது இப்படியான நாட்களில் புளியமரம் என்னோடான ஓர் உறுப்பாகி இருந்தது.
சத்திய மூர்த்திநகர் போலிஸ் குடியிருப்பில் இருந்த தோழி  வீட்டில் பெரிய நாவல் மரம் இருந்தது .மாலை நேரங்களில் அதன் கனிகளை உதிர்த்தும் பரித்தும் சாப்பாட்டு டப்பாவிற்குள் போட்டுக் கொண்டு தோழிகளோடு பேசிக்கொண்டே வழியில் பார்க்கிற திருமணமானதன் பொருட்டாய் பள்ளிக்கு வரமுடியாமலிருக்கும் சில தோழிகளுக்கு கொடுத்துச்செல்வது வழக்கம் எனக்கும் பெற்றுக் கொண்டவளுக்குமான ஆத்ம லயத்தைக் கூட்டுவதாகும்.
என் அம்மாவீட்டின்(என் வீடு என பெண்கள் உரிமையோடு சொல்லும் காலத்திற்காக காத்திருக்கிறோம்) பின் புறம் இரண்டு அகத்தி மரங்களை நட்டிருந்தேன்.மாலை நேரங்களில் அத்தி மரத்திற்கு அருகாமையில் அமர்ந்து எனக்குப் பிடித்த அம்புலிமாமாவைப் படிப்பேன்.பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மழைநாளொன்றின் காலை நேரத்தில் முருங்கை மரமொன்று சாய்ந்து கிடந்தது.வீட்டின் உரிமையாளர் அம்மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்.வளர்த்தவர் கையாலே வெட்டப்படும் மரம் என நினைத்துக் கொண்டதும் மனசு ஒருமாதிரியானது,சரியாக விளங்கிக் கொ
ள்ளவியலா மனநிலை.வீட்டில் முருங்கைமரம் வைக்கவேண்டுமென்ற ஆசை முன்பே பெருகியிருந்தாலும் பதியனிட மரத்துண்டு கிடைக்கவில்லை.இந்த மரத்தின் துண்டை நட்டுவைப்போம் என முடிவு செய்தேன்.
புது மனிதர்களிடம் உதவி கேட்பதில் சங்கோஜமிருந்தாலும் முருங்கை மரத்துண்டு தருவீர்களா எனக் கேட்டு வாங்கி வீட்டின் முகப்பில் பதியட்டேன்,அடுத்த ஆண்டு காயாய்க்காய்த்து தள்ளிவிட்டது.
விடுமுறை நாட்களில் அடுப்புக்கு விறகு சேகரிப்பது அவசியமான வேலை முள் மரங்கள் காடாய் விளைந்திருக்கும் வெயிலுக்கு முன் வெட்டலாமென்றால் முடியாது ஊரே அங்கு ஒதுங்கப் போகும் ஆள்நடமாட்டமில்லாத உச்சிவேளையில் மூச்சைப்பிடித்துக் கொண்டும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கவுமாக நண்பர்களோடு சேர்ந்து வெட்டுவோம்.அடியோடு வெட்டி தூரமாக இழுத்துவந்து நறுக்கிக் கட்டி வீட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்போம்.கோடை விடுமுறைக்கு கிராமத்திற்கு செல்லும் சமயங்களிலும் பாட்டிகளோடு விறகுசேகரிக்க செல்வேன். கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலைகளில் புளியமரமும் வயலுக்கு செல்லும் காட்டாற்றுப்பாதையில் பனைமரங்களும் வயலுக்கு அருகாமையில் உள்ள பாதைகளில் மா,வாழை,தென்னை,பப்பாளிமரங்களுமிருக்கும்.தனியாய்ப் போகிறோமென இந்தகாலத்துப் பிள்ளைகள் விசனப்படுவது போல நாங்கள் பயந்ததுமில்லை.நெட்டை நெட்டையாய் வளர்ந்த மரங்கள் இரவுகளில் பயணத்தோடு நிலா தொடர்வது போல புத்தம் புதிதாய்தொடரும்.
வீட்டின் வேலிகளுக்காக மருதாணிச்செடிகளையும் அவரைக்கொடிகளைடும் வளர்த்து வைப்பேன்.உயிரற்ற காய்ந்த மிளாறுகளை வைத்து பெடல்கட்டுவது எனக்கு விருப்பமற்றது.சின்ன வயசிலேயே பிள்ளைகளை விட்டு இறந்துபோன சூசை மாமா காலையில் பால் ஊற்ற வருவார்.கொடிசுற்றிய மருதாணி வேலியும் அதிகாலையில் சாணிதெளித்து கோலமிட்டு பூசணிப்பூ வைத்திருப்பதன் அழகையும் பார்த்து நீ நல்லா வருவேம்மா என பூரித்து சொல்லிச்செல்வார்.
வீட்டின் வடக்குப்பக்கம் தைலமரங்கள் (யூகலிப்டஸ்)இரண்டு வளர்த்திருந்தேன்.மரம் வளர்ப்பதற்கு அம்மாவும் அப்பாவும் இடையூறாகவோ ,ஆர்வம் கொண்டவர்களாகவோ இருந்ததில்லை அதனால் என் விருப்பப் படியாக மரங்களை நட்டு வளர்த்து வந்தேன்.உதவி தேவை என சொன்னால் அப்பா தக்க ஆலோசனைகளைத் தருவார்.மழைக்காலங்களில் குளிருக்கு இதமாய் தைல இலைகளைக்கொண்டு வெந்நீர்காய வைத்து குளிப்போம்.
ஒரு வெம்மையான மாதத்தின் பின் மதிய நேரத்தில் அம்மாவீட்டிலிருந்து அத்தைவீட்டிற்கு கிளம்பிய தினத்தில் தம்பி தங்கைகளைப் போலவும் நான் வளர்த்த மரங்களைப் பிரிந்ததற்காக உள்ளுக்குள் கலங்கியிருக்கிறேன்.
அத்தை வீட்டின் மாமரமும் நித்திய மல்லிக்கொடியும் என்னை அரவணைத்துக் கொண்டது.அலரி,செம்பருத்திப் பூக்களை அதிகாலையில் கொய்வதும் மாலையில் நித்திய மல்லிப்மொட்டுகளைப் பறித்துக்கட்டுவதுமாக இருந்த அந்நாட்களில் அத்தனை நறுமணத்தையும் கொண்டவளாக பெரிய மகள் வயிற்றில் துள்ளிக்கொண்டிருந்தாள்.ஐப்பசியின் அடை மழை நாளொன்றில் பிறந்த அவளுக்கு இதம் சேர்க்க நொச்சி இலைகளைத் தேடிக் கொணர்ந்து நீராட்டினோம்.அம்மா வீட்டின் தென்னங்கழி வேய்ந்த ஓட்டு வீட்டில் தென்னங்கழியில் கயிறு கோர்த்து தூளி கட்டினோம்.சிறுவயதில் ஆலவிழுதுகளைப் பிடித்து ஊசலாடிய கிரக்கத்தோடு தூக்கக் கலக்கத்தில் மகளை ஆட்டிக் கொண்டிருப்பேன்.
அப்பாவிற்கு வேப்பமரத்தின் மீது தீராக்காதல் அத்தைவீட்டிற்கு வந்ததன் பிந்தான் மாமனாருக்கும் அதேகாதல் இருப்பதை புரிந்து கொண்டேன்.கொஞ்சமும் உடல் படுத்தினாலும் அப்பா வேப்பம் கஷாயம் வைத்து பருகுவார். மாமனார் வேப்பங்கொழுந்தை அரைத்து வெறும் வயிற்றில் விழுங்குவார்.வேப்பம்பூ ரசம்,துவையல் வைத்து சாப்பிடுவது எம்வீட்டு பெரியவர்களுக்கு மெத்தப்பிடித்தமானது. கோடையில் வேப்பம்பூ சேகரிக்க மரத்திற்கு அடியில் அரிசி வாங்கிய சாக்குப் பைகளைப் பரப்பி ஓராண்டுக்கான பூக்களை சேகரித்து உலர்த்தி வைத்துக்கொள்வோம்.
மகள்களுக்கும் இரண்டுவயது வரை வாரம் தோறும் வேப்பங்கொழுந்துகளை அரைத்து சங்கில் ஊற்றிப் புகட்டினோம்.
மாநிலக்கல்லூரியில் படித்த காலங்களில் தேர்வு ந்டைபெறும் நாட்களில் அமைதியான சூழலை வேண்டி கல்லூரி நூலகத்தை ஒட்டியிருந்த மரங்களுக்கு அடியில் நண்பர்கள் கனகராஜ்,ரவி,ஞானயுவராஜ் மூவரோடுமாக கூட்டணி அமைத்து தேர்வுக்கு ஆயத்தப் படுத்திக்கொண்டிருப்போம்.
 வேலை கிடைத்து கரூரில் உள்ள மலைக்கோவிலூர் பள்ளியில் சேர்ந்தபின் காகிதபுரம் சென்ற போதெல்லாம் அங்கிருந்த மரங்களும் பறவைகளின் ஒலியும் மனதைக் கட்டிப்போடும்.உடன் பணியாற்றிய நண்பர்கள் துரைசாமி, நாகராஜ் வீடுகள் அவர்களது தோட்டத்திற்குள்ளேயே அமைந்திருந்தன. அவர்களுக்கானதென முருங்கைத்தோப்பு இருந்தது.தோப்புகளைப்பார்த்துக் கொண்டே அவர்கள் வீட்டு கம்மஞ்சோறும் கூழும் குடித்த அனுபவங்கள் காலத்திற்கும் மறக்கவியலாத சித்திரங்கள். முருங்கைக்கு பெயர்போன ஊர் கரூர் என்பதால் முருங்கை வரத்து அதிகமுள்ள நாட்களில் 25 காய்கள் அடங்கிய கட்டு வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்கும் மலைக்கோவிலூர் சந்தையில் வாங்கி சென்னைக்கு கொண்டு வந்து இரயிலில் இறங்கிய வேகத்தோடு காலையிலேயே நண்பர்கள் உறவுகள் வீடுகளுக்கு பங்குபிரித்து சேர்த்து விடுவோம்.
    தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க சித்தப்பாவும் நானுமாக கிளம்பினோம்.ஆரணிக்கு அருகே உள்ள கிராமம் நாளொன்றுக்கு 3 முறைதான் பேருந்து செல்லும்.நேரத்திற்கு செல்கிற பேருந்தை விட்டால்  அவ்வளவுதான்.இத்தனை தகவல்கள் தெரிந்திருந்தும் சென்னை பேருந்திலிருந்து இறங்கி கிராம பேருந்தைப் பிடிப்பதில் ஏற்பட்ட பத்து நிமிட தாமதத்தில் பேருந்தை தவறவிட்டோம்.
ஊரும் புரியாமல் வழியும் தெரியாமல் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திலோ ஈ-காக்கா கூட இல்லை.பசி வயிற்றைக் கிள்ள அங்கிருந்த டீக்கடையில் பேச்சுக்கொடுத்தவாறே டீ குடித்தோம்.அவசரம்னா பால் வண்டி வரும் அதில கேட்டு போயிறலாம்ங்க என்ற டீக்கடைக்காரரின் பேச்சில் குவளையிலிருந்த டீ ,பாலாக வயிற்றுக்குள் இறங்கியது.
பால் வண்டியை நிறுத்தினால் பால் டிரம்கள் நிறைந்திருந்தது.கெஞ்சி கிளீனரின் இடத்தைக்கேட்டுப் பெற்றுக் கொண்டு பயணித்தோம்.சாப்பிடாததால் பசி பிசைந்தெடுத்தது.பையன் பேசி முடியாமல் கை நனைக்க கூடாது என்பதால் சக்திகொடு என மனதை திடப்படுத்திக் கொண்டிருந்தேன்.ஒரு பொட்டல் வெளியில் பால் வண்டி இறக்கிவிட அருகிலிருந்த மாட்டுக்கொட்டடியில் விசாரித்துக் கொண்டோம்.இது ஆத்துப்பாலம்ங்க இப்படியே இரண்டுகிலோமீட்டர் நடந்தா ஊர் வரும்.அவங்க ஊருக்குள்ள இல்லங்க தோட்டம் அங்கிருந்து ஒரு காமணிநேர நடையிலே வந்திரும் ஊருப்பக்கம் போயி தெளிவா திசைகேட்டு நடங்க என்றார்.கண்கள் இருட்டிக்கொண்டு வர தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு நடந்தோம்.பச்சைப் புல்லோ மரமோ தென்படவில்லை.கானல்போல எங்கோ சில மரங்கள் தெரியத்தொடங்க சரியாதான் போய்க்கொண்டு இருக்கிறோம் என்பதில்  கொஞ்சம் தெம்பு கூடியது.
மாந்தோப்பிற்குள்ளிருந்த அவர்கள் வீட்டிற்கு வந்தோம் ,எங்களைப்பார்த்தவுடன் ஒருவர் வேகமாக தென்னைமரமேறி இளநீர் வெட்டிக் கொடுத்தார்,நாங்கள் வேகமாக குடித்து முடித்து முகங்கழுவிக்கொண்டு மாப்பிள்ளைய பார்க்கலாமா என்றோம்.இளநீர் வெட்டியவர்தான் மாப்பிள்ளை என்றதும் மப்டியிலேயே எங்களை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவரை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.அவர் எங்கள் வீட்டு (மாப்)பிள்ளையானார்.
கரூரில் உள்ள என் தம்பி திருநாவுக்கரசு ,அன்புசிவம் தோப்பின் இளநீர் பருகிய இனிமையான சம்பவங்களை இன்னும் இளையமகள் பாரதி சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
செம்மொழி மாநாட்டிற்கு கோவை சென்றிருந்தேன்.நாஞ்சில்நாடன் வீட்டிற்கு கலையிலேயே சென்றிருந்தேன்.காலை உணவை பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.செம்போத்துப் பறவை இவ்வளவு நேரமும் இங்கே இருந்தது.அதற்கு தண்ணீர் வைத்திருந்தேன் என்றார்.அந்தபறவையை எனக்கும் காட்டுங்கள் என்றேன்.தங்கை சங்கீதாவும்,நாஞ்சிலும் நானும் அவர் வீதியிலிருந்த மரங்களை அண்ணாந்து பார்த்தபடி செம்போத்தை தேடினோம்.அந்த வீதியெங்கும் எழிலார்ந்த அடர்ந்த மரங்களிருந்தன.இயற்கையோடு இருப்பது குறித்து ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.
அடுத்ததெரு ரஞ்சிதம் அத்தைவீட்டு பூவரசமரத்தின் இலைகளை உருட்டி ஊதினால் சப்தம் வரும் இப்பொழுதும் பூவரச மரங்களைப் பார்த்தவுடன் பீப்பீ செய்து ஊதவேண்டுமென கைகள் பரபரக்கிறது வளர்ந்துவிட்டோமென்று அறிவு  சொல்லிக்கொள்ள ஏக்கம் மட்டுமே மிச்சமிருக்கிறது
மரங்கள் நமக்கு கொடுத்திருக்கிற உரிமையை தனிமனிதன் கொடுத்து விட முடியாது .தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்துவிட்டு அமைதியாய் இருக்கிறது.மரங்கள் பறவைகளுக்கு இடம் தருகிறது.அணில் ஓடி விளையாட,எறும்புகள் ஊர,புழுக்கள் வாழ,அதன் நிழலில் இளைப்பாரும் உயிர்கள் எத்தனையெத்தனை……………………..பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு துணைநிற்கிற மரங்கள் குறித்த பிரக்ஞை இல்லாமல் தட்டையாய் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்று சொல்லிக்கொடுப்பதில் என்ன கிடைத்துவிடப்போகிறது.நமக்கு உரிமையுள்ள தாவரங்களை அழிக்கவும் ,அபகரிக்கவுமான தந்திரங்களை முறியடிப்பது எப்படி?அணு,பெட்ரோல்,நீர் முதலானவற்றைப் போல பாரம்பரிய விதைகளையும் தாவரங்களையும் கபளீகரம் செய்யத் தயாராக இருப்பவர்களை எதிர்கொள்வதுதான் இனிவரும் உலக அளவிலான போருக்குக் காரணமாக அமையுமோ?
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், ச விஜயலட்சுமி கட்டுரைகள் and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to மௌனத்தவமிருக்கும் உயிர்முடிச்சு………..

  1. rathnavel சொல்கிறார்:

    அருமையான எழுத்து நடை. அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். மனப்பூர்வ வாழ்த்துகள்.

  2. john francis சொல்கிறார்:

    ஆர்வத்தை தூண்ட செய்யும் எழுத்து நடை, படிப்போரை அவரவர் பால்ய பருவத்திற்கு கூட்டி செல்வதை தடுக்க முடியாது… ரசித்து ரசித்து எழுதி இருக்கிறீர் போலும், அந்த ரசனையினூடே பயணப்பட்டு மரங்கள் நடத்தும் உன்னத பாடத்தை படித்து நின்றேன். நிஜம் உணர்ந்தேன். நீங்கள் சொல்வது போல பாரம்பரிய விதைகளையும் தாவரங்களையும் கபளீகரம் செய்யத் தயாராக இருப்பவர்களை எதிர்கொள்வதுதான் இனி பெரிய வேலையாக இருக்கும் போல…

  3. Pingback: மரங்கள்-நினைவிலும் புனைவிலும்:வணக்கத்துக்குரிய நூல்! | UYIRI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s