பெண்ணெழுத்து நூலுக்கான பதிப்புரை

ச.தமிழ்ச்செல்வன்
”இன்று அதிகார மையங்களுக்கு எதிராகவும் சாமன்யர்களின் மீதான அவர்களின் நுண்ணரசியலுக்கு எதிராகவும் உரத்துப் பேசவும் குரல் கொடுக்கவும் எல்லா தளத்திலும் இயங்குபவர்கள் இருக்கிறார்கள். இப்படியானதொரு சூழல் சாத்தியப்பட்டிருப்பதற்கு  அவரவர் அறிவுநிலை சார்ந்து அல்லது புரிந்து கொள்ளுதல் பொறுத்து ஏராளமான காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் இப்படி சொல்லப்படுக்கிற எல்லாக் காரணங்களையும்விட முக்கியமானது, பெண் களத்தில் நிற்கிறாள்;அரசியல் பேசுகிறாள்; தன்னுடலைக் கொண்டாட வேண்டுமென்கிற தெளிவு கொண்டிருக்கிறாள். இது முன்னெப்போதையும்விட இப்பொழுது அதிகரித்திருக்கிறது. உண்மையில் போராட்டத்தின் எல்லாத் தளங்களிலும் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் இல்லை.”
 இந்தப் புரிதலை மையமாகக் கொண்டே கவிஞர் ச.விஜயலட்சுமியின் இத்தொகுப்புக்கட்டுரைகள் இயங்குகின்றன எனலாம்.பெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பின் மூலமாகவும் செம்மலர்,புதிய புத்தகம் பேசுது,உயிரெழுத்து,கல்குதிரை  உள்ளிட்ட சிற்றிதழ்களில் வெளியாகும் அவரது படைப்புகள் வழியாகவும் தமிழ் நவீன இலக்கியத்துக்குத் தொடர்ந்து காத்திரமான பங்களிப்புச் செய்துவருபவர் அவர்.செம்மலர் வாசகர்களுக்காக தமிழில் அதிகம் அறியப்படாத பெண் படைப்பாளிகள் பற்றி 15 மாதங்களுக்கு எழுதும்படி கேட்டுக்கொண்டோம். மிகுந்த பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும்  மகிழ்ச்சியுடனும் அப்பணியை அவர் செய்து கொடுத்தார்.இன்று அக்கட்டுரைகள் பொறுத்தமான அவரது முன்னுரை ,முடிவுரையுடன் வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.புதுப்புனல் உடைப்பெடுத்து வருவதுபோல வரத்துவங்கிய பெண் எழுத்துக்கள் பற்றி கவிஞர் ராஜ மார்த்தாண்டன்தான் முதன் முதலாக ஒரு பரந்த பார்வைக்குள் சில கணிப்புகளை முன் வைத்தார் என்று நினைக்கிறேன்.கோணங்கி, அவருடைய பார்வையில் மிக விரிவான கட்டுரை ஒன்றை கல்குதிரையில் வைத்திருக்கிறார்.
ஒரு இடதுசாரி மனோபாவத்துடன், குறிப்பிட்ட சில கவிஞர்களையேனும், அறிமுகம் செய்யும் முதல் நூலாக ச.விஜயலட்சுமியின் இந்நூலை நான் பார்க்கிறேன். நன்கு அறியப்பட்ட,பேசப்படும் படைப்பாளிகளையும் பார்க்க இன்னும் பரவலான கவனிப்பைப் பெறாத இளம் கவிஞர்கல் பலரை ச.விஜயலட்சுமி இக்கட்டுரைகளில் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.அந்த வகையிலும் இந்நூல் ஒரு முக்கியத்துவம் பெறுகிறது.
”பாரதிக்குப்பின் பாரதியை விஞ்சக்கூடிய பெண்ணுரிமைக் கருத்துகளை பின்வந்த  தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தில் காணமுடியவில்லை.  மேலும் பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள் கவிதைகளில் இடம் பெற்றிருந்த அளவிற்கு பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துகளை முன்வைத்த (பெண்களுக்கான உடை, கருப்பை முதலானவற்றை உள்ளடக்கியோ புறந்தள்ளியோ) பகுத்தறிவும் முற்போக்கும் கொண்ட மரபார்ந்த சிந்தனைகளில் இருந்தும் விடுவித்துக் கொண்ட பெண் பாத்திரம் கவிதைச் சூழலில் உருவாக்கப் படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்நிலையிலிருந்து விடுவித்துக் கொண்டு வருகிற கவிதை வரலாற்றில் உடலரசியல் என்பது குறிப்பிடத் தக்கக் கூறாக நிற்கிறது.”
என்கிற அவரது அரசியல் பார்வை எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.ஆணாதிக்க சிந்தனை கட்டமைத்த பென் உடல் பற்றிய கற்பிதங்களை-அவை புனிதமாகவும் தீட்டாகவும் தொடர்ந்து நம்மோடு வாழ்ந்து நம் மனங்களை வழிநடத்தி வரும் பின்னணியில்-உடைத்து நொறுக்குகிற உடலரசியலை இக்கட்டுரைகளில் பல இடங்களில் ச.விஜயலட்சுமி வலுவாக முன் வைக்கிறார்.உடலரசியலின் தேவையையும் நியாயத்தையும் உரத்த வார்த்தைகளில் பதிவு செய்கிறார்.பெண்ணின் உடலுக்குள் உறைந்திருக்கும் அடர்ந்த காட்டை ஓடும் நதியை கட்டவிழ்த்து விடும் உடலரசியலைப் பேசும் கவிதைகளைச் சரியாக இனங்காட்டி அறிமுகம் செய்துள்ளார்.
மனித மனங்களைத் தகவமைக்கும் பண்பாட்டு நிறுவனங்களிலேயே பெண்ணைத் தகவமைக்கும் சக்திமிக்க பண்பாட்டுத் தொழிற்சாலையாகத் திகழும் குடும்பம் பற்றிய அவருடைய பார்வையோடு முழுமையாக நம்மால் ஒத்துப்போக முடிகிறது.
”ஒரு வீட்டுவிலங்கைப் பழக்குவதைப் போலத்தான் வீடு அது உருவாக்கும் மனிதர்களையும் பழக்குகிறது.பெண்ணுக்கு எதுவும் தெரியாது என்ற மனோநிலையைக் கட்டிக்காக்கிறது.  சமூகப் பங்கேற்பில் பொதுவெளிக்கு வர தடை செய்யப்பட்டு அதுசார்ந்த அனுபவங்களை மறுக்கிற ஆணாதிக்கம். அடுத்தடுத்த தலைமுறையையும் பெண் அறிவை விசாலமானதாகப் பார்க்காமல் உணர்வின் அடிப்படையில் பார்க்கவைக்கிறது. அனுபவங்களின் குறைபாடுகளைக் கடத்திச் சென்று பெண் ஏதும் அறியாதவள் என்ற மாயத்தை உருவாக்குவதில் தீவிர வினையாற்றுகிறது.” என்று தெளிவான பார்வையோடு குடும்பத்தை அணுகுகிறார்.
ஒவ்வொரு கவிஞரின் கவிதைகள் பற்றிப் பேசும் புத்தகமாக இது அமைந்தபோதிலும் அவ்வக்கவிதைகளின் பாடுபொருளை முன்வைத்து ச.விஜயலட்சுமி குடும்பம்,உடலரசியல், நிலம்,பெண்ணின் தீராத்தனிமை,காதல் எனப் பரந்துபட்ட பல விசயங்கள் குறித்த தன்னுடைய பார்வைகளை மிக மிக அழுத்தமான வார்த்தைகளிலும் குரலிலும் பதிவு செய்தபடி செல்கிறார்.அவை நம்மை ஈர்க்கின்றன.இத்தொகுப்பின் மிகப்பலமான பகுதிகளாக அவை அமைந்துள்ளன என்பதைக் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும்.
’கவிதை நுண் உணர்வுகளின் பொதி. உணர்வுக்கு அதிகமுக்கியத்துவம் தரும் வடிவம். உணர்வெழுச்சியில் வார்த்தைகளை வரிசைப்படுத்திக் கொள்ளும் சாத்தியத்தை உடையது. அன்பு, பாசம், நட்பு எனும் மென்னுணர்வுகள் அணைத்துக் கொள்ளவும் கூறுபோட்டு விடவும் கூடியவை. கவிதை துடிதுடிக்கும் மனத்தின் வெளிப்பாடுதானே ‘ என்று கவிதை என்றால் என்ன என்பது குறித்த தன் பார்வையை ஓரிடத்தில் எழுதிச் செல்கிறார்.பொதுவாக நான் அறிந்தவரை எல்லாக் கவிஞர்களுமே தங்கள் முதல் கவிதைத் தொகுப்பில் என் கவிதை எது என்பது பற்றியும் எது கவிதை என்பது பற்றியும் ஒன்று அல்லது சில கவிதைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.சிறுகதை அல்லது நாவல் எழுதும்போது இத்தகு குறிப்புகள் எழுதும் மனநிலை நம் படைப்பாளிகளுக்கு வருவதில்லை-ஆரம்ப நாட்கள் என்பதால் புதுமைப்பித்தனுக்கு அந்த சவால் இருந்து அவர் சிறுகதையின் இலக்கணம் பற்றி எழுதியிருக்கிறார்.ச.விஜயலட்சுமி தான் அறிமுகம் செய்யும் கவிஞரின் கவிதைப்போக்கிற்கேற்ப கவிதை பற்றிய தன் பார்வையை வைப்பது இன்னும் சிறப்பு.
ஓர் ஆணாக இருந்து தொலைக்க வேண்டிய நிலையில் நின்று இக்கட்டுரைகளையும் அவர் அறிமுகம் செய்யும் கவிதைகளையும் வாசிக்க நேர்ந்த அனுபவம் வலியும் குற்றமனமும் புதிய வெளிச்சமும் பெற்ற தருணங்களாக அமைந்தன எனக்கு.இன்று எழுதிக்கொண்டிருக்கும் எந்த ஒரு பெண் படைப்பாளியின் ஒற்றை வரியை வாசிக்கும்போதும் இத்தகைய ஒரு மனநிலைக்குள் புகுந்து மீளும் நிலைதான் ஏற்படுகிறது.’பெண்ணின் இயலாமையும் புலம்பலும் சுயமற்ற அவளது வாழ்வும் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட பெண்களால் இயல்பாக இருக்கமுடிகிறது. ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிற பெண்மனம் தவிப்புக்கும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாத தடைகளிலிருந்து மீட்டுக்கொள்ள போராடித் தோற்பதும் தொடர்கிறது.’ என அவர் பிரக்ஞை அடைந்த ஒரு  பெண்ணின் மனம் பற்றிப் பேசும்போது சுய நினைவுக்கு வரும் ஆணின் மனம் குறித்துப் பேசத்தோன்றுகிறது.இங்கேயும் தன்னைப்பற்றியே பேசி இந்த வெளியையும் ஆக்கிரமிக்க விழையும் ஆண்மனமாக அல்லாமல் ஆண் மனங்களில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்ததான ஓர் உரையாடலை இக்கட்டுரைகளை முன்வைத்துத் துவக்கலாம் என்பதுதான் அந்த உணர்வு.
இத்தொகுப்பின் முன்னுரையும் முடிவுரையும் பெண்ணெழுத்து பற்றிய நம் புரிதலுக்கு விரிவானதொரு தளம் அமைத்துத் தருகின்றன.முன்னுரையில் சங்க காலம் தொட்டு இன்று வரை மாற்றமடைந்துவரும் தமிழ்க்கவிதை பற்றிய ஓர் பெண்ணியப்பார்வை முன்வைக்கப்பட்டுள்ளது. பிற வடிவங்களைக் காட்டிலும் பெண்கள் கவிதை வடிவத்தையே முன்னெடுத்துச் செல்கின்றனர். நாவல் சிறுகதைகளில் களம் இறங்கிய பெண்களின் எழுத்து கவிதை வடிவத்தில் பெண்ணியக் குரலாக வெடித்து வெளிப்படுகிறது. பிற இலக்கியத் துறைகளில் பெண்படைப்பாளர்கள் மிகச் சிலரே ஈடுபட்டுள்ளனர். இரட்டைச் சுமையை சுமக்கும் பெண்களுக்கு நகாசு வேலைகள் அதிகம் செய்ய தேவையற்ற, இயல்பாக ஈர்ப்பை உருவாக்குகிற கவிதை வடிவமே இலகுவாக உள்ளது.என்று அவர் குறிப்பிடுகிறார். மிக முக்கியமான உண்மை இது.அன்றாட வாழ்வில் எழுத வரும் நம் பெண்களுக்குக் கிட்டும் அவகாசம் நாவல் போன்ற அதிக உழைப்பைக்கோரும் வடிவங்களுக்குள் செல்ல விடாமல் த்டுப்பதை நாம் உணர முடிகிறது.நாவல் பிறந்த காலத்திலும்கூட வசதியான உயர்சாதி வீட்டுப் பெண்கள் மாத்திரமே ஓரிரு நாவல்களை எழுத முடிந்தது என்கிற உண்மையும் நமக்கு உறைக்கிறது. எழுதும் பெண் எதிர்கொள்ளும் குடும்பச் சிக்கல்கள் பற்றிப் பல பெண் படைப்பாளிகள்  நேர்காணல்களிலும் நேர் பேச்சுக்களிலும் குறிப்பிட்டுள்ளனர்.வீட்டுக்கழிப்பறைக்குள் மறைந்து நின்று கவிதை எழுதி இதழ்களுக்கு அனுப்பிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ள பெண்கள் பலருண்டு.
சில பெண்கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நூலாக மட்டுமின்றி பெண்ணெழுத்து பற்றிய ஆழமான புரிதலுக்கும் விவாதத்துக்கும் நம்மை அழைக்கும் குரலாகவும் இந்நூல் அமைந்துள்ளதே இந்நூலின் சிறப்பு என்றெனக்குப்படுகிறது. இன்னும் அதிகமான பக்கங்கல் அளித்திருந்தால் இன்னும் விரிவான ஒரு நூல் கிடைத்திருக்குமே என்கிற உணர்வுதான் இச்சமயத்தில் எனக்கு.
முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
மிக்க அன்புடன்,
ச.தமிழ்ச்செல்வன்
பத்தமடை
16.6.2011
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், ச விஜயலட்சுமி கட்டுரைகள், பெண்ணெழுத்து and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to பெண்ணெழுத்து நூலுக்கான பதிப்புரை

  1. rathnavel சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s