இரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள்

ச விஜயலட்சுமி
கல்கி இதழில் பிரசுரமான  கதை
1
புதிதாக வேலை கிடைத்த பூரிப்பு தேகமெங்கும் மெருகேற்றியிருந்தது சாந்திக்கு. அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து முதல்தடவையாக உறவுக்காரர்கள் இல்லாத ஊருக்கு செல்கிறாள். தேவையானவற்றை மறந்துவிடவில்லை என்பதை சரிபார்த்தபிறகு லக்கேஜை தூக்கிக் கொண்டாள். இரயிலில் டிக்கெட் கிடைக்காது தக்கலில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று தக்கலில் போட்டாள் . இரயில் பயணம் இலகுவானது.மனசை மிதக்கச் செய்யும். சிறுவயதில் இரயிலில் போவதென அம்மா சொன்னதும் சந்தோஷத்தில் குதிப்பாள். பேருந்தில் செல்வதென்றாள் வெறுப்பாயிருக்கும், வயிற்றைப்பிரட்டும். கழிவறையில்லாததால் அம்மாவை சீண்டி விரலைக்காட்டியதும் அடிபின்னி விடுவாள். நேரங்காலமே கிடையாதா கழுதை என ஏகத்துக்கும் திட்டுவாள். சுற்றியிருப்பவர்கள் இவளைப் பார்க்கும் பொழுது அவமானமாயிருக்கும்.
பேருந்து ஓரளவு ஊர்களைக் கடந்து செல்லும் இரயில் ஆளரவமற்ற வனாந்தரத்தைக் கடக்கும் கும்மிருட்டு தடதட ஓசை இவற்றினூடாக கற்பனை சிறகடிக்கும் புதிய உலகத்தில் பயணிக்கத் தொடங்குவாள். அந்த சின்னவயசின் அனுபவங்கள் திரும்பக்கிடைக்கப்போகும் சந்தோஷத்தோடு புறப்பட்டாள். இரண்டாம் வகுப்பு பெட்டி இடமில்லாமல் நிறைந்திருந்தது. டிப்டாப்பாக உடையணிந்த ஒருவன் டிடிஆரிடம் ஒரு பர்த் கிடக்குமாவென கேட்டுக்கொண்டிருந்தான்.ஏசி பெட்டியில் வேண்டுமானால் ஏற்பாடு செய்து தருவதாக டிடி சொல்லிக் கொண்டிருக்க ஒரு அம்மா புடவையை உதறி தூளிகட்ட அளவு பார்த்தாள்.வண்டி கிளம்பட்டும்னு கூட  இல்லையாம்மா என சத்தம் போட்டுவிட்டு இன்னும் கிளம்பவில்லையே என்பதுமாதிரி புருவத்தை உயர்த்திவிட்டு நேரத்தைப் பார்த்தார்.வண்டி கிளம்பியது.
    அருகில் வயசுப்பெண் புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.சுற்றிலுமான சத்தம் அவளை அசைத்திருக்கவில்லை.கல்லூரியில் படிக்கிறாளா வேலைக்கு போகிறாளா யோசித்தவாறே பெட்டியிலிருந்தவர்களைப் பார்த்தாள் சாந்தி.வியாபாரத்திற்காக செல்பவர்கள் ,சில கல்லூரிப்பசங்க தவிர மற்றவர்கள் குடும்பத்தோடு இருந்தார்கள்.இவளும் இன்னொருத்தியும்தான் குடும்பத்தோடு வராத பெண்கள்.மற்ற இரயில்களைப் போல இந்த இரயில் கிடையாது.ஒர் ஏசி பெட்டி ஒர் அன்ரிசர்வ்ட் பெட்டி சில இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மட்டும்தான் நாங்கள் போகிற ஊருக்கு செல்லும்.இது கேரளா செல்லும் இரயில் எங்கள் பெட்டிகளை மட்டும் ஈரோட்டில் கழற்றி விட்டுவிடும்.இங்கிருந்து திருச்சி செல்ல மின்சார இணைப்பு இல்லையாம் புகைரயில் தானாம்.இந்த பெட்டிகளை அதனோடு இணைத்து விடுவார்களாம்.கேட்க புதிதாய் இருக்கிறது.
 பெட்டிகளை கழற்றிமாட்டுவதெல்லாம் சகஜம்தானே பேசிக்கொண்டிருந்ததை கேட்டதால் தான் இவளுக்கு இத்தனை விவரமும் தெரிந்தது.வண்டிகிளம்பும் வரை இதுதெரியாமல் போனது மனசை என்னவோ செய்தது.அருகில் இருந்தவள் சாந்தியிடம் உங்க பர்த் எது எனக் கேட்டாள்.சாந்திக்கு ஆச்சரியமாக இருந்தது.பேசக்கூட செய்கிறாளே பர்த் நம்பரை சொன்னாள்.அவள் எனக்கு அப்பர் பர்த் வசதியா இருக்கும் முடியும்னா உங்க அப்பரை நான் எடுத்துக்கிறேன்.என்னோடது மிடில் என்று படபட வென பேசிவிட்டு பதிலை எதிர்பார்க்காமலே கழிவறைக்கு சென்றாள்.திரும்பியவள் முடிவு தெரியவேண்டி சாந்தியைப் பார்க்க தாராளமா எடுத்துகோங்க என்றாள்.அவள் சொன்ன அடுத்த நொடி அப்பருக்கு சென்று புத்தகத்தை எடுத்து படிக்கத்துவங்கிவிட்டாள்.
     பெட்டியிலிருந்தவர்கள் தூங்குவதற்கு ஆயத்தமானார்கள்.மிடில் பர்த் என்பதால் கதவருகே வந்து வேடிக்கைப் பார்க்கத் துவங்கிவிட்டாள்.காற்றுக்கு முகம் காட்டிக்கொண்டு தனக்குப் பிடித்த பாடல் வரிகளை முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.அவளது பெட்டிகளுக்கான டிடிஆர் இவளிடம் என்னம்மா பண்ற தூக்கம் வரலயா?என கேட்கத்தொடங்கி இவளுக்கு அந்த வழித்தடத்திலிருந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும்வகையில் உரையாடல் முடிந்தது.
  இப்படியாக வார இறுதியில் பயணித்துக் கொண்டிருந்தவளுக்கு ஓரளவு தெளிவு கிடைத்தது. இவளைப்போல முதல் பயணத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் வந்து கொண்டிருந்தாள்.அவளது பெயர் பிருந்தா என சொல்லியிருக்கிறாள்.இருவரும் சில வார்த்தைகள் பேசிக்கொள்ளுமளவு பழகியிருந்ததனால் இரவு வீட்டில் சாப்பிடாமல் இரயிலில் சேர்ந்து சாப்பிடத் தொடங்கியிருந்தனர்.பிருந்தா கலகலப்பாக பேசினாலும் திடீரென கண்களில் பயம்தென்படும்.அதற்கு காரணம் தெரியவில்லை.இப்படி அவள் அச்சப்படுவது இரயில் பெட்டிக்குள் மட்டும்தானென புரிந்துகொண்டாள். அவளுக்கு புகளூர் காகிதமில்லில் வேலை பொறியியல் படித்திருக்கிறாள்.முதல் வகுப்பு ஏசி டிக்கட்டுக்கு அலுவலகத்தில் பணம் கொடுத்தாலும் இரண்டாம் வகுப்பு ஆர்டினரி கோச்சில் பயணம் செய்ய விரும்புவதாக சொல்லியிருக்கிறாள். அவ்வளவு எளிமை.
 பேசிக்கொண்டிருந்தாலும் பர்த் போட ரெடியானதும் உடனே படுக்கச்சென்றுவிடுவாள்.சாந்தி இறங்குவதற்கு முன்பு பிருந்தாவின் புகலூர் நிறுத்தம் வருவதால் இவளைத்தட்டி கையாட்டிவிட்டு இறங்கிவிடுவாள்.சாந்தி தொலைவில் தெரியும் புளியமரங்களையும் தென்னைமரங்களையும் மஞ்சக்காடுகளையும் ரசித்துக்கொண்டு பச்சைவாசத்தை அனுபவித்தபடி புது உலகத்தில் பிரவேசிப்பது போல உணர்வாள்.அதற்குள் இவளது நிறுத்தம்வந்துவிடும்.
2
ஸ்கூட்டியை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்த பிருந்தாவின் பின் உட்கார்ந்திருந்தவள் கண்ணைக் குறுக்கிக்கொண்டு போதும் நிறுத்துடீ என அலறிக்கொண்டிருந்தாள்.பிருந்தாவிற்கு திரில்லர் ரெய்ட் மீது தீராத காத்ல்.பின்சீட்டில் ஒருத்தி அலற ஆரம்பித்தாள் இவள் உடம்பின் இரத்தம் சூடாக இன்னுமின்னும் வேகம் கூட்டிக்கொண்டிருந்தாள்.
 வண்டியை தோழியிடம் கொடுத்துவிட்டு இரயில் நிலையம் விரைந்தாள்.இன்றும் பிருந்தா அப்பர்பர்த் கேட்டு முகத்தில் வெளிச்சம் படாதவாறு சீக்கிரமாக படுத்தாள்.இருளில் திடீரென ஒரு உருவம் அவள்மீது அழுத்தி முலைகளைக் கசக்கியது.மூச்சுவிடமுடியாமல் வாயைக்கவ்விக் கொண்டதால் எதிர்ப்பைக்காட்டும் வேகத்தை செலுத்தமுயன்று அவள் முகத்தை மீட்டுக்கொள்ள போராடினாள். முகத்தை விடுவித்துக்கொண்டு வீளென அலறினாள்.பிருந்தா பிருந்தா சாந்தி பலங்கொண்டமட்டும் அவளை உலுக்கினாள்.கண்விழித்தவள் பேயறைந்ததுபோலிருந்தாள்.
  முகங்கழுவி வந்து தீர்மானமான குரலில் சாந்தி இனி நான் ட்ரெயின்ல வரப்போறதில்ல பஸ்ல வந்துட்றேன்.பேசிக்கலாம் சாந்தி என்றவள் ஈரோட்டில் கழற்றிவிடப்பட்டு வண்டி நிற்பதை உறுதிசெய்துக்கொண்டு மிகசகஜமாக பால் வாங்கி இந்தா சாந்தி சூடா பால் குடி ப்ரெஷ்ஷாயிடுவே என்றவாறு சிந்தாமல் கொடுத்தாள்.சற்று நேரத்திற்குமுன் அலறியவள் இயல்பானதில் சந்தோஷமடைந்த சாந்தி அவளிடம் பேசினால் முடிவை மாற்றிக்கொள்வாளென நினைத்து பஸ்ல வந்தா உடம்பு போயிடும்மா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு சரியாயிடுவ  பால்கப்பை கசக்கி எறிந்தபடி சொன்னாள்.
   சாந்தி என்ன செய்யனும்னு எனக்குத்தெரியும் நீங்க உங்களைப் பார்த்துக்கோங்க டிரெயின் அவ்வளவு சேஃப்பா இல்ல இங்க சில வன்முறைகள் நடக்குது வெடுக்கென வெட்டிவிட்டதோடு புதிதாக ஒருவிஷயத்தைப் பேசும் பதற்றத்தினை அடக்கிக் கொண்டாள்.அதன் பின் சாந்தி கேட்ட கேள்விகளுக்கு பதிலற்ற மௌனம் தான் நிலவியது
3
சாந்தி இந்தவாரம் பிருந்தா வருவாளாவென எதிர்பார்த்தாள்.வரவில்லை.சேஃப்டியில்லயென அவள் சொன்னது நினைவைக் கலைத்துப்போட்டது.திடீரென இப்படி சொல்லக்காரணமென்ன என்கிற யோசனையில் தன்னிலை மறந்திருந்தாள்.நின்னுட்டே கனவு காண்றீங்களா வென்ற டிடி யின் குரலில் தெளிந்தாள்.சுகமான பயணத்தை இழந்துவிட்ட கவலை அவளிடம் தெரிந்தது.பிருந்தாவை சந்திக்காமலிருந்தால் இப்படி ஒருபோதும் நினைக்கத்தோன்றியிருக்காதென மனசுக்குள் சொல்லிக்கொண்டாள்.சாப்பிட்டாச்சாவென கேட்ட டிடிக்கு தலையசைப்பில் முடிந்ததென உணர்த்தினாள்.பெட்டில எல்லாரும் படுத்துட்டாங்க ஆட்சேபனை இல்லைன்னா நான் சாப்பிட்ரவரை பேசிட்ருக்கலாம் வாங்க என்றார்.ஐம்பதைக்கடந்தவர்.உயரத்திற்கேற்ப வாட்ட சாட்டமானவர்.தூரத்திலிருந்துபார்க்க அமிதாப் போல தெரிவார்.பெட்டியில் எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார்.இப்படியே படுத்தால் தூக்கம் வராது சற்றுபேசிக்கொண்டிருந்தால் நன்றாயிருக்குமெனத் தோன்றியது.டிடியுடன் ஏ.சி பெட்டிக்கு சென்றாள்.பல்வேறு சிறுவயது சாகசங்களை பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தார்.இடையிடையே சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.குடித்திருக்கிறாரென தெரிந்தும் பேசிக்கொண்டிருந்தாள்.அப்பா அவ்வப்போது குடிப்பவர் என்பதால் பதற்றமேதுமில்லை.இந்தவயசுக்கு லேட்நைட்ல பிரியாணி சாப்பிடாதிங்க உடம்புக்கு நல்லதில்ல என்றதும் அடுத்த லாகிரியை ஆரம்பித்தார்.சார் நான் தூங்கப்போறேன் நீங்க சாப்பிட்டு படுங்க குட்நைட் சொல்லிவிட்டு விரைந்தாள்.
சரியா தூங்கலன்னா காயிற வெய்யிலுக்கு உடம்பு செத்துபோகுது வேலபாக்க முடியறதில்ல .கொளுத்ற வெயில்ல  சன்னல மூடிட்டு படுக்கிறாங்க மூச்சுமுட்டாதானு தெரியல தன் மனசுக்குள் சொன்னவள்.சன்னலைத்திறந்து விட்டு படுத்த வேகத்தில் உறங்கினாள்.
 3
வாழ்க்கை ஒரு பயணம்.ஒவ்வொரு உயிரும் செய்கிற பயணத்தில் வித்விதமான அனுபவங்கள் கிடைக்குது.சுவாரஸ்யமும் புதுமையும் தரும் பயணம் நினைவை விட்டு அகலாதது போல இந்த பயணத்தில் வாரம் ஆயிரம் கிலோமீட்டர்களையும் பல்வேறு மனிதர்களையும் கடந்து கொண்டிருந்தாள் சாந்தி.இந்த பயணத்தால் கிடைத்துவரும் அனுபவங்கள் அவளை பக்குவப்படவும் சமயோசிதமாக சிந்திக்கவுமாக கூர்மைபடுத்தியதாக நம்பினாள்.கண்ணாடியில் பார்க்கும் சமயங்களில் அவளது கண்கள் தயக்கத்தை உதறிவிட்டு தெளிவடைந்ததாகத் தெரிந்தது.மனம் சொல்வதில்தானே எல்லாம் அடங்கியிருக்கு இப்படியான மனஓட்டத்தில் இருக்கைக்கு போய் உட்கார்ந்தாள்.இப்படி மனசுக்குள் பேசிக்கிறத குறைத்துக்கொள்ளனும் அதற்குள் டிடி வ்ந்தார்.இவளைப்பார்த்ததும் ஹாய் சாந்தி எப்படியிருக்கிங்க இனி சில நாட்களுக்கு உங்க ஆபிஸ் லீவ்னு பேப்பர்ல படிச்சேன் சிரித்துக்கொண்டே சொன்னார்.
ஆமாம் பழைய கட்டிடன்றதால பராமரிப்பு வேலைகள் ஆரம்பிச்ருகாங்க இரண்டுவாரத்தில முடிஞ்டிடும் சார்
கையிலிருந்த மாதஇதழின் தலையங்கத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்.இன்று குழந்தையை வைத்துக்கொண்டு யாரும் பயணிக்கவில்லை.வயதானவர்களுமில்லை.இரவு பயணத்தில் லோயர் பர்த் என்றால் இப்பொழுதெல்லாம் பிடிப்பதில்லை.பர்த் போட்டுவிட்டால் உட்காரமுடிவதில்லை.சன்னலோரம் காற்றுக்கு முகம்காட்டிக் கொண்டு பயணிக்க முடிவதில்லை.கதவருகே நின்றுவிட்டு அப்பரில் படுப்பதென்பதை வசதியாக பழகியிருந்தாள்.
சிலமாதங்களுக்குப்பின் இன்றுதான் மீண்டும் லோயர்பர்த்தும் அதே ஐம்பதைக் கடந்த டிடியையும் பார்க்கிறாள்.செக்கிங் முடித்துவிட்டு இனி அரக்கோணத்தில் ஏறுபவர்கள் இருப்பதாக சொன்னவர் ஏம்மா இங்க உக்காந்துட்ருக்க  என்னுடைய பெட்டிக்கு வாம்மா சொன்னதோடு நிற்காமல் இவளுடைய சிறு பையை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தார்.சட்டென நடந்த இச்சம்பவத்தால் சுற்றுமுற்றும் பார்த்தவள் அடுத்து என்னசெய்வதென புரியவில்லை.இங்கேயே இருந்துவிடுவோமா? போவோமா? சுற்றியிருந்தவர்கள் இவள் என்ன செய்வாள் என்கிற ஆர்வம் கொண்டவர்களாய் பார்த்துக்கொண்டிருந்தனர்.
தயங்குவது ஆபத்தான வியாதி எதிமறையாக அசம்பாவிதம் நடந்துவிடும் எனநினைப்பது இயல்பாகவே சாந்திக்கு சுத்தமாய் பிடிக்காது.எல்லாம் சில நொடிகள்தான் .சாந்தி மிகமெதுவாக கைப்பையை எடுத்துக்கொண்டு நடந்தாள்.
சிரித்துக்கொண்டே வா சாந்தி என நகர்ந்து இடம்விட்டார் டூடயர் ஏ.சி பெட்டி டிடிகொடுத்த இடத்தில் உட்காராமல் எதிரில் அமர்ந்தாள்.இங்கயே இரும்மா அரக்கோணம் வரப்போகுது செக்பன்னிட்டு வரேன் கையில் பயணிகள் விவரமிருந்த பட்டியலுடன் கிளம்பினார்.
 சாந்தி உனக்கு அசட்டு தைரியம் அதிகம்டீ முடியாதுன்னு சொல்லிட்டு பழைய இடத்திற்கு போவதுதான் சரியாயிருக்கும்.பாக்கிறவங்க உன்னதான் பேசுவாங்க என அடங்க மறுத்த மனசிடம் அந்தாளுதான எம்பய்ய தூக்கிட்டு வந்தவன் அவனவிட்டுட்டு என்னைமட்டும் பேசிடுவாங்களா?பேசரநாக்க இழுத்து அறுக்கனும் என சொல்லிக்கொண்டாள்.
 அரக்கோணத்திலிருந்து இரயில் கிளம்பி கொஞ்சநேரமானது டீடீ கையில் ஒரு பாலிதின் கவருடன் வந்தார்.காக்கவச்சுட்டனா சாரி அசடு வழிந்தார்.கவரிலிருந்து சாப்பாட்டு பொட்டலங்களையும் ஒரு பிரௌன் நிற பாட்டிலையும் எடுத்தார்.நீ சாப்பிட்டுட்டிரும்மா நான் இத முடிச்சிட்டு சாப்பிடரேன் .பாட்டிலைத்திறந்து கொண்டிருந்தவரிடம் இரயிலில் இதெல்லாம் பயன்படுத்தக்கூடாதே நீங்க ஆக்‌ஷனெடுக்கிற இடத்திலிருந்துகிட்டு இப்படி செய்யலாமா என்றாள்.
 இதெல்லாம் அலவோடிருந்தா தப்பில்ல ட்ரெயினே நம்மோடது அப்புறமென்ன நீ பயப்படாம சாப்பிடு கண்கள் சிவப்பேற சாந்தியினருகில் வந்தார்.திரை மூடியிருக்கிறதாவென அவர் கண்கள் பார்த்துக்கொண்டது.அந்த பெட்டியில் இவர்களை தவிர்த்து இரண்டு வயதானவர்கள்தான் பயப்பட வேண்டாமென்று சொன்னபோது பிருந்தா சாந்தியின் கண்முன் தெரிந்தாள்.
 என்ன வேணும் சார் ஏன் அடிக்கடி பயப்படாதேன்னு சொல்றீங்க
எனக்கென்ன பயம் ? நிறுத்தி நிதானமாக பேசிக்கொண்டிருந்த சாந்தியை புரிந்துகொள்ள முடியாமல் பார்த்தார்.புரிந்துகொண்ட பாவத்தோடு சாந்தியின் தொடைமீது கை சென்றது.மறுப்பேதும் சொல்லாமல் இறுக்கமான முகத்தோடிருந்தவள் சட்டென கையைதட்டிவிட்டாள்.நீமனசுல பெரிய இவனா?நீ பையதூக்கிட்டுவந்தா பின்னால வரனும் படுக்கநினச்சா படுக்கனுமா செருப்பு பிஞ்சிடும் நாயே.உம்பொண்டாட்டி வேலபாக்குற காலேஜ்ல வேலபாக்குற பாரதிபுத்திரன் ,ஜார்ஜ்,நரசிம்மம் கேள்விபட்ருக்கியா? இரு இன்னும் அஞ்சுநிமிஷத்தில் உம்பொண்டாட்டி போன்பன்னுவாங்க பாரு பொரிந்துதள்ளியவளிடம் முகம்வியர்க்க வேண்டாசாந்தி யாருக்கும் சொல்லாத ப்ளீஸ் அதன்பின் இவளிடம் மன்றாடினான் அந்தவார்த்தைகள் எதுவும் அவள் காதில் விழவில்லை உதடு புன்முறுவலோடு குளிர்ந்தது.செல்போனை அழுத்தி பாரதிபுத்திரன் ஐயா நல்லாருக்கிங்களா? பா.கல்பனா வின் கவிதைத்தொகுப்புக்கு நீங்க சொல்லிருக்க விமர்சனம் படித்தேன் …………………உரையாடல் நீண்டது.திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்த டிடி அடுத்த படுக்கைக்கு பதற்றத்தோடு ஓடினான். தலையணைகளை சரிபார்த்துக் கொண்டிருந்த அந்த பெட்டியின் உதவியாளனின் கண்கள் எட்டிப்பார்த்த இவள்கண்களை சினேகமாய் பார்த்தது.
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to இரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள்

 1. rathnavel சொல்கிறார்:

  அருமை

 2. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  பயணங்கள் பலவிதம்
  அதன் அனுபவங்கள் சுவை
  உங்கள் பதிவு போலவே.

 3. இரயில் விளையாட்டின் இராட்சசநொடிகள் சிறுகதையை கல்கியிலேயே வாசித்தேன். நல்ல கதை. பெண்களின் பயணங்களின் சுதந்திரத்தை டி.டி போன்ற சிலர் கெடுத்துவிடுகிறார்கள். பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s