சிவப்பின் நிறம் பெண்மை

 ச.விசயலட்சுமி
அதிகாலையின் செவ்வரியோடிய சாம்பல் வானம் கற்பனைக்கு எட்டாத இரு வண்ணங்கள் கைகோர்த்துக் கொண்டு பறப்பதாக இருக்கிறது. சில்லிட்ட காற்றில் மழையில் கரைந்தோடும் மண்ணைப்போல கரைந்து கொண்டிருந்தேன்.
என் பெயர் மீரா .என் தாத்தாவுக்கு பக்தமீரா படம் பிடிக்கும்னு எனக்கு இந்தப் பெயரை வெச்சாராம்.எனக்கு விவரம் தெரிஞ்சப்பறம் என் பெயரை நானே சொல்லிப் பார்த்துக்குவேன்.என் பெயர உலகத்திலேயே அத்தனை வசீகரமும் அன்பும் கொண்டதா நினைச்சேன்.தாத்தாவிடம் கதைகேட்டு மனசில் மீரா என்றால் இப்படித்தான்னு பிம்பம் உருவாயிருச்சு.ஒரு பெயரிலே அன்பை உணரமுடியுமா?அன்பால் கட்டுண்டு கிடப்பது அன்பொழுக வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதென்பது சாத்தியமா? இப்படியெல்லாம் யோசிக்க ஆரப்பிச்சா எதுவும் மிஞ்சாது.ஆகிற வேலையைப் பார்ப்போம்.
என் அம்மா அன்புமயமானவ ஆனாலும் அவளுக்கு வெளியுலகம் தெரியாது அப்பா பேச்சுக்கு தலையாட்டுகிற கட்டுப்பெட்டி.வீட்ட தாண்டி தனியா வெளிய போகப் பழகாதவ.அவளப்போல இருக்கக்கூடாதுன்னு நினைச்சுகிட்டே வளர்ந்தவங்கிறதால நான் அவளுக்கு நேரெதிர்.இன்றைய பெண்களிடத்திலிருக்கும் தைரியத்தோடு ஜுன்ஸ் குர்த்தா வோட கால் தரையில பதியாம சுத்தறது எனக்கு பிடிக்கும்.சமீபமா காஷ்மீர் பாக்கனும்னு ஆசையாயிருக்கு தென்னிந்தியாவ தாண்டி டெல்லிக்கு போனா போதுமா வடக்கு எல்லைக்கும் போய்ப்பார்ப்போம்னு தோணுது.எல்லா மண்ணும் நிற வேறுபாட்டைத்தவிர அடிப்படையில் ஒண்ணு போல தெரியுது.பயணத்தால கிடைக்கிற அனுபவங்களுக்குமுன் வேறெதுவும் நிக்கமுடியாது.சின்னவயசுல பாடப்புத்தகத்தில் தால் ஏரியின் படகுவீட்டைப் பார்த்தப்ப ஒரு நாள் நானும் அதுபோல படகில் போகணும், படகு வீட்டில் படுத்துகிட்டே ஏரிய வேடிக்கைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கேன்.
இப்ப சில நாட்களுக்கு விடுமுறை கிடைச்சிருக்கு.இத வீணாக்காம காஷ்மீர பாக்க கிளம்புவோம் என நினைச்சு வீட்டில சொன்னேன். சொன்ன உடனே அம்மாவும் அப்பாவும் பயந்துட்டாங்க.உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிருக்கா ஏண்டீ நீமட்டும் இப்படியிருக்க என புலம்ப ஆரம்பிக்க இதற்குமேல் இங்கிருந்தால் தாங்காதென என் பட்சி பறந்து விட்டது.மாலை வீடு திரும்புகையில் ஒரு முன் ஏற்பாடுடன் வந்தேன்.காஷ்மீரம் முழுக்க போகல ஜம்மு வைஷ்ணவி வரை போய்ட்டு வரேன்னு சொன்னதும்.அம்மா எந்த இடம் போகிறோம் என்பதைக்காட்டிலும் கோவிலுக்கு தானே போகட்டும் என சம்மதித்தாள்.எல்லோரையும் சம்மதிக்க வைத்து இதோ நிஸாமுதின் இரயில்வே நிலையத்திலும் வந்திறங்கிவிட்டேன்.
தோழி சுதா என்னை அழைத்துச் செல்ல இரயில் நிலையம் வருகிறாள்.மானசீகமான அன்பை தினமும் பேசிட்டிருக்கவங்ககிட்டதான் பெறமுடியும் என்பதை நான் ஒத்துக்கமாட்டேன்.சுதாவும் நானும் வருசத்தில சில நாள் மட்டுமே பேசிக்கிட்டாலும் அன்னியோன்னியமா உணர்றவங்க. நீ உன் தோழிவீட்டுக்கு போகிறாய் எங்களுக்கென்ன என தப்பித்துக் கொள்ளாமல் ப்ளீஸ் வாசித்துக் கொண்டிருக்கிற நீங்களும் என்னோடு சேர்ந்து வாங்க.ஜம்முவ சுத்திப்பார்த்திடலாம்.
முன்னேற்பாட்டு திட்டமில்லாமல் கால் போன போக்கில் சுற்றும்போது சந்திக்கிற மனிதர்களிடம் புத்தம்புதுவாசத்தை நுகரமுடிகிறது.எல்லா மனிதர்களும் ஊர்களும் பெரிய வித்யாசமில்லாமல் இருப்பதாகத்தோன்றினாலும் நுட்பமாய் மாறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.இதனை இரசிக்கத்தெரிந்தவர்களுக்கு இன்பமாயிருக்கிறது இரசிக்கத்தெரியாதவர்களுக்கு நரகமாயிருக்கிறது என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.இதோ கடுகெண்ணெய் வாசத்தோடு உருளைக்கிழங்கு குழம்பும் சுக்கா ரொட்டியும் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
எதிரே ஒரு தென்னிந்திய குடும்பம் சாவல் பாலக்பன்னீர் கேட்டுவிட்டு யுத்தத்திற்கு தயாராவதுபோல கண்கள் சிவக்க விழுங்கமுடியாமல் கிடக்கிறார்கள்.அரிசி கொஞ்சமும் வேகவில்லை அப்படியே இருக்கிறது.கீரையில் பச்சை நாற்றம் போகவில்லை என வயதான அம்மா காரேமூரேயென கத்திக் கொண்டிருந்தாள்.அவர்களோடிருந்த குட்டிப்பெண் தயிரில் சர்க்கரையும் சிறிது வேகாத சாதத்தையும் சேர்த்து ருசித்து சாப்பிடுகிறாள்.பாட்டியும் நானும் சிவப்பரிசியை ஊறவிட்டு வெல்லத்தோடு கலந்து தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடுவது நியாபகத்திற்கு வந்தது.அந்த சிறுமியின் முகத்தில் பதற்றமில்லை. உண்பதை ருசித்துக்கொண்டிருந்த அலாதியான முகபாவம்.அப்படியே அவளைக்கடித்து தின்றுவிடத்தோன்றுகிறது.இந்த சின்ன வயசில் சூழலுக்கு தக்க தன்னை பொருத்திக்க தெரிஞ்சிருக்கு.குழந்தைக்கு ஒன்றும் தெரியாதென நாமாக முடிவெடுத்து அவர்களுக்கு இயற்கையாக இருக்கிற ஆளுமைகள குறைத்து விடுகிறோம்.
சிறுவயதுக் கனவான காஷ்மீரின் தால் ஏரிக்கு போக ஆசை முட்டியது.அதற்கான பாதுகாப்பு முன்தயாரிப்பு அனுமதிவாங்குவதையெல்லாம் நினைக்கும்போதே தலைசுற்றியது.அங்கு செல்ல மாட்டேனென அப்பாவிற்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்.ஒரு மாறுதலுக்கு ஜம்முவரை சென்று வைஷ்ணவி தேவி ஆலயத்துக்கு போகலாமென முடிவெடுத்திருக்கிறேன்.துணைக்கு சுதா அவள் தங்கை ஜெயாவை அனுப்பியிருக்கிறாள்.இதுபோதாதா வழியெங்கும் ரகளைதான். ஜெயாவுக்கு பக்தியிருக்கு , நான் ஏதியிஸ்ட் பக்கா நாத்திகவாதி அப்படியிருந்தும் வைஷ்ணவிய பாக்க வந்துருக்கேன்.அம்மன்கள்மீது தீராக்காதல் நாளுக்கு நாள் வளருது.பக்தி என சொல்லி அந்த ஈடுபாட்டை குறைச்சுக்க விரும்பல இது நேசம்.
அப்பாவியா வெகுளியா இருக்க பெண்களுக்கு மத்தியில பெண் கொலைசெய்தாள்னு செய்திவருமில்லையா அதுபோல சாந்த சொரூபியா பெண்களிருந்தாலும் அவர்களுக்கான விசயங்களுக்கு கூட யோசிக்க நேரமில்லாம ஓடிட்டு இருக்காங்க.அவங்களுக்கான பிரச்சினைக்கு புலம்புவதைத்தவிர வேறெதும் செய்யத்தோன்றாதவங்க.ஆனால் பெண்தெய்வங்கள் ஆயுதம் தாங்கறாங்க,அநியாயத்த எதிர்த்து நின்னதா கேள்விப்படுகிறோம்,எந்த கொடுமையையும் ஏத்துக்கிறதில்ல .குறந்தபட்ச நியாய அநியாயங்களைத் தட்டிக்கேப்பாங்க.இத்தனை துணிவுமிக்க பெண் தெய்வங்கள போற்றுகிற பெண்களுக்கு தெய்வம் கொஞ்சம் துணிவை, நெஞ்சுரத்தைக் கொடுக்குமென்றால் சந்தோஷந்தான். நம்ம பெண்கள் இன்னும் மண்ணெண்ணை ஊத்திக்கொளுத்தற வரைக்கும் சும்மா இருக்காங்கல்ல………….மாறும் ஆனா மாறாதுன்னு சிரிச்சிட்டே விளம்பரத்துல நடிக்கிற மாதிரிதான் பெண்களின் வாழ்க்கையும் பழக்கப்பட்டிருக்கு.அதனால ஆயுதம் தாங்கிட்டிருக்க பெண் தெய்வங்கள தாயா பாக்கிறதவிட போராளியா உணரத்தோணுது.உடனே மதவாதின்னு என் நெத்தில எழுதிடாதிங்க ப்ளீஸ்….சின்னப்பசங்களுக்கான கார்டூன் நிகழ்ச்சிகள்ள இந்த தாய்தெய்வத்து கதைகள சேர்க்கலாம்.அடுத்த தலைமுறை குழந்தைகளுக்காவது செய்தி போய்ச்சேரும் . தொலைகாட்சில சிலசாமிகளப்பத்திகாட்டி பிஞ்சுல பதியவிட்டுகிட்டிருக்காங்க…இது எங்கபோயி முடியுமோன்னு இருக்கு…
சாப்பிட்டு முடித்துவிட்டு மலையேற ஆயத்தமானோம் போனி எனும் கோவேறு கழுதையிலும் மனிதர்கள் சுமக்கும் டோலியிலும் கொஞ்சம் பேர் போய்க்கொண்டிருந்தார்கள். பார்க்குமிடமெல்லாம் உற்சாகம் பெருக்கெடுக்கிறது.உறவென்றும் அறிமுகமென்றும் கிஞ்சித்தும் கிடையாதபோதும் எதிர்படுவோரிடம் ஜெய்மாதாதீ என குரலெழுப்பினர்.மாலை நேரம் மிக அழகாக இருந்தது உஷ்ணம் குறைந்தாலும் சூரிய அஸ்தமனம் இரவு 7 மணிக்கு மேல்தான் போதுமான வெளிச்சத்தோடு நடந்துகொண்டிருந்த அப்பாதையில் மனிதர்களின் மிகப்பெரிய சொத்தான நம்பிக்கை குறுக்கும் நெடுக்குமாக ஊர்ந்துகொண்டிருந்தது. சிவப்புத்துணிகளை தலையில் கட்டிக்கொண்டு பக்திப்பரவசத்தோடு எனக்குமுன் சென்றுகொண்டிருந்த கூட்டத்தில் சிலர் ஓரமாக பின் தங்கத்தொடங்கினர்.முகத்தில் உற்சாகம் குறைந்திருந்தது.ஒரு பாட்டியம்மாவுடன் நெடிய வாக்குவாதம் பேசிக்கொள்வது தெளிவாகப் புரியவில்லை.நிற்காமல் கிளம்புவோம் இருட்டத்தொடங்கிவிடுமென நச்சரித்த ஜெயா அவசரப்படுத்தினாள். என்னைச் சுற்றியிருந்த அத்தனை உற்சாக முகங்களைக்கடந்து சோகத்தில் மூழ்கிய வருத்தம் சூழ்ந்த முகங்களோடு மனம் பச்சக்கென ஒட்டிக்கொள்கிறது.இதற்கான காரணத்தை யோசிப்பதும் இது பொதுவான மனித இயல்பு என தேற்றிக் கொள்வதுமாக இருப்பதை ஜெயாவிடம் சொல்ல நினைத்தாலும் உதடுகள் பிரிந்து வார்த்தை வர மறுத்தது. ஜெயா இன்னும் அஞ்சு நிமிஷம்டா ஜஸ்ட் வெயிட் சொல்லிவிட்டு அந்தக்கூட்டத்தைப் பார்த்தேன். பாட்டியையும் பதினாலு வயசுப்பெண்ணையும் அருகிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றனர். யாருக்கோ முடியல போலிருக்கு நம்மோடவந்தவங்க என்ன ஏதுன்னு தெரியாம எப்படிகிளம்புறது ஒருவார்த்த கேட்டுப்போம் ஜெயா என்றேன்.அவளும் இந்தியில் விசாரித்தாள்.
நடக்கமுடியல அதான் இங்க ரூம் போடுறாங்க என்று ஒரு வாண்டு சொல்லியது.’பெண்களின் மனதில் ஏதோ குழப்பம் விவரமா கேளு ஜெயா ஹ்ம் கேக்கிறன் கொஞ்சம் பொறேண்டீ என நிதானித்துவிட்டு அருகில் போய் கேட்டுவந்தாள்.அந்த பொண்ணுக்கு விசேசமாம்டீ சரி பேசிக்கிட்டே நடப்போம் என எட்ட கால்வைத்து நடந்தாள்.இருட்டினாலும் பயமில்ல ஜெயா பொறுமையா போவோம் பாவம் இந்த இடத்தில வந்து அவளுக்கு இப்படியானதை அந்தக்குடும்பத்தினர் ஆரோக்கியமா எடுத்துக்கொள்ளல. குறையா பாக்குறதால பதற்றமா இருக்காங்க மக பூப்படஞ்ச சந்தோஷம் அவ அம்மா முகத்தில இல்ல …..மகளைத் தப்பு செஞ்சவளப்போல பாக்குறா..பேசிக்கொண்டிருந்தாலும் இவ்வளவு நேரமிருந்த உற்சாகம் என்னிலிருந்து வடிந்து திடீரென வெறுமையாய்ப் போனேன்.
பக்கத்திலிருந்த குன்றின்மீது ஒருவன் ஏறிக்கொண்டிருந்தான்.சுமக்கமாட்டாமல் ஒரு பொதியை சுமந்திருந்தான். சுமையோடு வேகமாக அனாயசமாக நடந்தான்.மங்களான உடை உருவம் புள்ளியென மறைய வானம் ஒளிகுறையத் தொடங்கியது. நல்ல கட்டுமஸ்தான உடல் இருக்கும்னு நினைகிறேன்.அந்த மலையில் ஆள் நடமாட்டமிருக்கா மாதிரி தெரியுதே என்று அருகிலிருந்த டீ கடையில் விசாரித்தோம்.அங்கு மக்கள் வசிக்கவில்லை பாதுகாப்பின் பொருட்டாக ராணுவத்தார் தங்கியிருக்காங்க என்றார்.பொதிசுமந்து வாழப் பழகியிருந்தாலும் ஒவ்வொரு அனுபவத்தின்போதும் புதுசா நினைகிறோம்;இயல்புக்கு வர்றதுக்குள்ள திணற ஆரம்பிச்சிடுறோம்.இந்த நினைவோட்டங்களிலிருந்து மெல்ல வெளியில் வரத்துணிந்தேன்.
காஷ்மீரப் பெண்கள் எங்கெல்லாம் தென்படுகிறார்களோ அவர்களது பாவனைகளைக் கவனிக்கத்தொடங்கியிருந்த எனக்கு ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை .மலையேறத்துவங்கியபின் அங்கு காஷ்மீரப்பெண்களை பார்ப்பது அரிதாயிருந்தது.மக்களுக்கு இணையாக திரும்பிய பக்கமெல்லாம் இராணுவம் நடமாடிகொண்டிருந்தது சங்கடப்படுத்தியது.இயல்பு வாழ்க்கையிலிருந்து எங்கோ விலகி தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன்.இராணுவத்தாரை பொருட்டாக நினைக்காமலோ அல்லது அவர்களோடு இணைந்ததுதான் வாழ்க்கை என்றோ இங்கிருப்பவர்கள் வாழப்பழகியிருந்தனர்.
நம் ஊரில் பார்க்கிற பாய்லர் டீக்கடைகள் ஒன்றும் கண்ணில் தென்படவில்லை. ஜெய்மாதாதீ என சொல்லிக் கொண்டுபோன ஒரு கும்பலோடு கலந்து புறப்பட்டோம்.சிறுவர்களும் அந்த கும்பலில் இருந்ததால் குரல்கொடுத்துக்கொண்டே வேகமாக சென்றனர்.இந்தக்குழந்தைகளின் குதூகலத்தை அனுபவிக்க வேண்டுமென ஆசையாயிருந்தது.இருந்தாலும் ஒட்டமுடியாமல் நுண்ணிய சுவரொன்று இருக்கிறது.இவர்களின் குதூகலத்தை எந்தப்பருவத்தில் இழந்துவிடுகிறோம்?ஏன் இழக்க வேண்டும் ?அறிவின் வளர்ச்சியில் குழந்தைத்தனம் மறையும் போது வெகுளித்தனமான குதூகலத்தைத் தவறவிடுகிறோமோ?.அறிவால் மட்டுமே வாழ்க்கையை நிரப்பப் பழக்குகிறோம்.உணர்வை பெருமதியானவற்றின் மீது செலுத்தாமல் அதிகாரம் செலுத்துவதற்கான ஆயுதமாக மாற்றக் கற்றிருக்கிறோம்.
வேகமான நடையால் கணுக்காலில் வலி தெறித்தது. ஆங்காங்கே அமர்ந்திருந்தவர்களை அப்பொழுதுதான் கவனிக்கத்தொடங்கினேன்.பாதிக்கும் மேல் மலையேறி முடித்த களைப்பு மூச்சுத்திணறலோடு சிலர் மருந்துகளை உறிஞ்சிக்கொண்டிருந்தனர்.ஒரு நடுத்தர வயது குஜராத்திய பெண்மணி நெஞ்சுவலி என்று பதறிக்கொண்டிருந்தாள்.ஆக்சிஜன் போதவில்லை போலும் நானும் ஜெயாவும் பதற்றப்படாமல் மூச்சை இழுத்துவிடுங்க என்றோம்.அருகாமையில் மருத்துவ முகாம் இருக்கிற அறிகுறிதெரிந்தது அவர்களிடம் அங்கே அழைத்துச் சென்றால் ஆக்சிஜன் வைப்பார்கள் எனத்தகவல் சொல்லிவிட்டு கிளம்பினோம். கால்வலி காரணமாக மிகுந்த கலைப்போடு இருந்தாலும் விரைவாக ஏறிவிட்டால் ஓய்வெடுக்க முடியும் என்ற ஜெயா காலை சீக்கிரம் எழுந்து தரிசனம் பார்ப்போமா என்றாள்.
பார்க்கலாம் அதில் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை சாமிகும்பிடவில்லையென்றால் பார்க்கக் கூடாதா ? ரியலி நைஸ் என்ற ஜெயாவிடம் இது பெரியாரோட பாலிசி என்றேன்.அட போடி ஏதாவது சொல்லிக்கிட்டு எடக்கு மடக்கா யோசிச்சிட்டிரு அம்மா திட்டுறாங்கன்னா சும்மாவா? என சொல்லி சிரித்தாள். எப்பவோ சொல்லிவெச்சுட்டு போனதை ஏன் எதுக்குன்னு இல்லாம பாலோபண்ணனுமாடீ?அம்மாட்ட ஏம்மா நீ தாலிகட்டியிருக்க அப்பாக்கு மட்டும் வேண்டாமா புதுசா ஒரு விழா வெச்சு எல்லாருக்கும் சொல்லி கல்யாண நாளுக்கு நீ அப்பாக்கு தாலி கட்டுமான்னு சொன்னதும் அடிக்க வந்துட்டா நீ என்னடான்னா அவளப்போலவே குறைசொல்லுற என்றதும் அடக்க மாட்டாமல் சிரித்தாள்.எப்படிடீ இப்படி யோசிக்கிற……..உனக்கு வித்தியாச சிரோன்மணி என்ற பட்டத்தை உடனடியா வழங்கிறேன் என மீண்டும் குலுங்கிக்குலுங்கி வாய்கொள்ளாமல் சிரித்தாள்.
சிரிச்சது போதும்டீ படுக்க இடம் தேடுவோம் இரவில் பேசவேண்டுமெனத்தோன்றவில்லை
படுத்தவுடன் உறங்கிப்போனோம்….விடியலில் மக்களின் பேச்சரவம் சுவர்க்கோழியைப் போல எழுப்பியது.தரிசனத்திற்கு போவோமானு தெரியல………ஜெயா சொன்னதும் அரைக்கண் திறந்து பார்த்தாள் .கூட்டம் நிரம்பிவழிந்தது குளித்துத் தயாரானோம்.வயிறு நெருடிக்கொண்டேயிருந்தது.பாதுகாப்புக்கான வஸ்துவை வைத்துக்கொண்டிருக்கிறேன்.பயமில்லை….உறுதி செய்துக்கொண்டபின் கிளப்பலாம் என்றேன். நாங்கள் வரிசையோடு கலந்து நின்றோம் முன் தினம் பார்த்த குடும்பம் அத்தனைப் பொலிவையும் இழந்து நின்றுகொண்டிருந்தது.நெளிந்து வளைந்த வரிசையிலிருந்து ஒரு பெண் வெளியேறிக்கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்து கோவமாக திட்டிக்கொண்டிருந்தார்கள்.என்காதில் ஜெயா கிசுகிசுத்தாள்.அந்த இடத்தில் பெண்ணை வெளியேற விடாமல் தடுக்கவேண்டுமெனும் வேகம் குருதியெங்கும் கொப்பளித்தது …….நீங்க பிறக்கும்போதும் இப்படித்தானே சிவந்த ரத்தத்தில் தோய்ந்து வந்திருப்பீங்க…கருவறைன்னாலே இரத்தவீச்சத்தோட கலந்தது தானே …..இந்தக் கருவறைக்கு மட்டும் ரத்தக்கவுச்சி பிடிக்காமபோகுமா அதையுந்தான் பார்ப்போமென சொல்ல நினைத்த அத்தனை சொற்களும் அவளுக்குள் ஊறைந்து போனது.
அமைதியான முகமும் ஆற்றிக்கொள்ள முடியாத மனமுமாய் தரிசனம் முடிந்து வெளிவந்தாள்.ஈரப்பிசுக்கு நனைந்துவிட்டதாக சொன்னது…நெற்றியில் சிவப்பை வைத்திருந்த மக்கள் கூட்டத்தின் சிவப்புத்துணியிலும் நெற்றிச்சிகப்பிலும் அதே பிசுபிசுப்பும் ரத்தக்கவுச்சியும் பளீரெனத்தெரிந்தது.அவர்களது ஆடையிலும் உடலிலும் தெரிந்த சிவப்பிற்குள்ளிருந்து ஆயுதமேந்திய ஆதித்தாய் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.அவளது யவ்வனத்தில் பார்க்கும் இடமெங்கும் கண்ணுக்கெட்டியதூரம் வரை சிவப்பாகவே ஒளிர்கிறது…….அந்த ஆதித்தாயின் பல்லொன்று மீராவின் உதட்டுச்சுழிப்பில் பளீரெனத்தெரிய மீராவின் பயணம் முடியாததன் தொடர்ச்சியை மலைப்பாதையின் வளைவுகள் பேசிக்கொண்டிருக்கின்றன.
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கதைகள், பெண்ணெழுத்து and tagged , , , . Bookmark the permalink.

1 Response to சிவப்பின் நிறம் பெண்மை

  1. VENKAT சொல்கிறார்:

    Excellent way of expressions . U r very true in expressing u r thought in a nice manner . Nee Vazhaga Palandu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s